Skip to main content

“ஆர்டர்லி முறையைப் பின்பற்றுவது வெட்கக் கேடானது”- உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம்!

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

 

'Following orderly system is disgraceful'- High Court judge condemns!

 

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்திலும் ஆங்கிலேய ஆர்டர்லி முறையைப் பின்பற்றுவது வெட்கக்கேடானது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

 

உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென வழக்கு ஒன்றில் காவல்துறைக்கு  உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் 19 ஆர்டர்லிகளைத் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

19 ஆர்டர்லிகள் தான் திரும்பப் பெறப்பட்டுள்ளனவா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், முதலமைச்சரின் எச்சரிக்கை மட்டும் போதாது என்றும், நடவடிக்கை அவசியம் எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும், நாட்டின் அனைத்து குடிமக்களும் ராஜா, ராணிகள் தான் எனவும், நாம் அனைவரும் அவர்களின் சேவகர்கள் தான் எனவும் கூறினார். 

 

75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், ஆங்கிலேய ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக் கேடானது என நீதிபதி வேதனை தெரிவித்தார். ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தைப் போதும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஆனால் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறைத் தலைவரிடமிருந்தோ வருவதில்லை எனக் கூறினார். 

 

தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலத்தில் ஆர்டர்லி முறை இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். இதையடுத்து, பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதி ஆர்டர்லி பயன்படுத்தும் காவல் உயரதிகாரிகளைக் கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உள்ளது எனக் குறிப்பிட்டார். 

 

இந்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.யை எதிர் மனுதாரராகச் சேர்த்த நீதிபதி ஆர்டர்லி முறை ஒழிப்பு தொடர்பாக, தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். 

 

பின்னர்,வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 18- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.     

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி’ - உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Rajesh Das petition dismissed High Court in action

தமிழக சிறப்பு டி.ஜி.பி. பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பி.யை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி. அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன் பின்னர் ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு (16.06.2023)  தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்த தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ராஜேஸ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (23.04.2024) மீண்டும் நீதிபதி தண்டபானி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ்தாஸ் சரணடைய விலக்களிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததுடன் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.