Skip to main content

'வீராணம் ஏரி திறப்பால் வெள்ளம்; நிவாரணம் கிடைக்க நடவடிக்கை' -எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி

Published on 14/12/2024 | Edited on 14/12/2024

 

 

வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் வீராணம் ஏரி 47.5 அடி முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 18,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரால் கீழவன்னியூர், சிறகிழந்தநல்லூர், திருநாரையூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களிலும்,  20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை படகுகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்தனர்.  இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக வேளாண் மற்றும் உழவு நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ சிந்தனைச் செல்வன், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சிதம்பரம் உட்கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் உள்ளிட்ட உள்ளிட்டவர்கள்  வெள்ளம் பாதித்த பகுதிகளான  வீராணம் ஏரியின் மதகு, வீராணம் ஏரி,  கண்டமங்கலம்,  லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ''தமிழ்நாடு முதலமைச்சர் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடலோர மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்கள்.

அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வீராணம் ஏரி அருகே தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கோ அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிப்பெருக்கியின் வாயிலாக அறிவிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 41 செ.மீ அளவில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. ஏற்கனவே, வடகிழக்கு பருவமழை முன்னிட்டு வீராணம் ஏரியில் இருந்து படிப்படியாக நீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது பெய்த கனமழையின் காரணமாக கூடுதலான தண்ணீர் வந்ததாலும், வீராணம் ஏரியில் அதன் முழுக்கொள்ளவு 47.5 அடியில்  13-ந்தேதி 46.75 அடி உயரத்திற்கு எட்டியுள்ளது.

இதன் காரணமாக பாதுகாப்பு கருதி வீராணம் ஏரிக்கு அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமமக்களுக்கு முறையாக 6 முறை அறிவிப்பு வெளியிடப்பட்டு, வி.என்.எஸ் மற்றும் வெள்ளியங்கால் மதகுகளின் வழியாக பாதுகாப்பான முறையில் சிறிது சிறிதாக நீரின் அளவு உயர்த்தப்பட்டு 18,000 கனஅடி வெளியேற்றப்பட்டது. மேலும், தொடர் மழையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீராணம் ஏரியானது தினந்தோறும் அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, நீரின் அளவு குறைக்கப்பட்டு வருகிறது.

காட்டுமன்னார்கோயில் வட்டம், லால்பேட்டை பகுதியில் முறையான அறிவிப்பு தெரிவிக்கப்பட்டதன் வாயிலாக அனைத்து பொதுமக்களும் வெளியேற்றப்பட்டு, வெள்ள நீர் பாதுகாப்பான முறையில் வெள்ளியங்கால் ஓடை வழியாக வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. பெஞ்சல் மற்றும் தென்பெண்ணையாற்று வெள்ளப்பெருக்கின் காரணமாக சுமார் 3,59,315 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தற்போது மழைநீர் வடிந்த பிறகு சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும்.

வீராணம் ஏரி அருகில் உள்ள பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ள இடங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 350 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு 15,000 நபர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டது. பதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் உடனடியாக தண்ணீரை வெளியேற்றி, மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

சார்ந்த செய்திகள்