Skip to main content

13 நாட்களாகத் தரை தட்டி நிற்கும் மிதவைக் கப்பல்; இறுதி முயற்சியில் வல்லுநர்கள்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Floating ship grounded for 13 days; Experts in the final effort

 

பலநாள் போராட்டத்திற்குப் பிறகும் பாறை இடுக்கில் சிக்கிய மிதவைக் கப்பலை அகற்ற முடியாததால் தூண்டில் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளுக்கான ஸ்டீம் ஜெனரேட்டர் உற்பத்திக் கலன் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 'மாருதி' என்ற மிதவைக் கப்பல் மூலமாக கூடங்குளம் அணுமின் நிலையப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது கலன்களை எடுத்து வந்த மிதவைக் கப்பல் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டது. இதனை மீட்கும் பணி கடந்த 9 ஆம் தேதி காலையில் இருந்து இன்று வரை அதற்கான பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக சென்னை துறைமுகப் பகுதியில் இருந்து சிறப்பு வல்லுநர்கள் குழு கடந்த 10ம் தேதி காலை அந்த பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். மிதவைப் படகு மூன்று இடங்களில் சேதமடைந்தது தெரிந்து அதைச் சரி செய்யும் பணியில் மும்பையைச் சேர்ந்த குழுவினர் ஈடுபட்டனர். தொடர்ந்து இழுவைப் படகின் மூலம் மிதவைக் கப்பல் இழுக்கப்பட்டது. ஆனால் கயிறு அறுந்துவிட்டது. அடுத்த முயற்சியாக அதிக விசைத் திறன் கொண்ட இழுவைப் படகை மும்பை துறைமுகத்திலிருந்து வரவழைத்துதான் மிதவைக் கப்பலை எடுக்க முடியும் என வல்லுநர் குழு பரிந்துரைத்தது.

 

ஆனால் அனைத்து முயற்சிகளும் பலனளிக்காமல் போனது. இந்நிலையில், நிலை சாய்ந்து வரும் கப்பல் தொடர்ந்து சாயாமல் இருக்க நான்கு புறமும் நங்கூரம் இடப்பட்டுள்ளது. தொடர்ந்து பணியாளர்கள் இரவு பகலாக சுமார் 300 மீட்டர் நீளம் வரை கடலில் கல் மற்றும் மண்ணைக் கொட்டி தூண்டில் வளைவு போன்ற அமைப்பை உருவாக்கி வருகின்றனர். அந்தத் தூண்டில் பாலம் வழியாக ராட்சத க்ரேனை கொண்டு சென்று ஸ்டீம் ஜெனரேட்டர் உற்பத்திக் கலன்களை மிதவைக் கப்பலில் இருந்து மீட்கத் திட்டமிட்டுள்ளனர். இதுவும் ஒரு வகை இறுதி முயற்சிதான் எனக் கூறப்படுகிறது. இந்த ஸ்டீம் ஜெனரேட்டர் உற்பத்திக் கலன்கள் முன்னதாகவே 400 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பழமையான கல்வெட்டு பற்றிய தகவல் பலகை திறப்பு 

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Opening of information board about ancient inscription

350 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி தேவாலயத்துக்கும், குருக்களுக்கும், சிஷ்யர்களுக்கும் எட்டயபுரம் பாளையக்காரர்களான செகவீர மற்றும் திசவீர எட்டப்ப நாயக்கர்கள் பாதுகாப்புக் கொடுத்ததைத் தெரிவிக்கும் பழமையான கல்வெட்டு பற்றிய விவரங்கள் அடங்கிய தகவல் பலகையைப் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ச.அந்தோணிசாமி திறந்து வைத்தார்.

எட்டயபுரம் பாளையக்காரர் செகவீர எட்டப்பநாயக்கர் கி.பி.1663ஆம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளுக்கு தன்னுடைய சீமையில் உள்ள சறுவேசுரன் கோவில் மற்றும் ரோமாபுரி சன்னாசிகள் மடம் ஆகியவற்றிற்கு எந்த இடையூறுமின்றி அதற்குப் பாதுகாப்புக் கொடுத்து நடத்திக் கொண்டு வந்திருக்கிறார். தன் தகப்பனார் செய்ததை, தானும் அப்படியே தொடர்ந்து நடத்த விரும்புவதாக, இந்தக் கோவிலுக்கு வந்து இங்கிருந்த குருக்களை கி.பி.1688-ம் ஆண்டு சித்திரை மாதம் 10-ம் நாள் சந்தித்து அதைக் கல்வெட்டாகவும் வெட்டிக் கொடுத்துள்ளார் அவர் மகன் திசவீர எட்டப்ப நாயக்கர். இக்கல்வெட்டு தேவாலய முன் வாசலின் தென்பகுதியில் பதித்து வைக்கப்பட்டுள்ளது.

இதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் படியெடுத்துப் படித்து ஆய்வு செய்து பழைய கல்வெட்டின் ஒவ்வொரு வரியையும் தற்போதைய எழுத்தில் எழுதிக் கொடுத்தனர். அதன் வரலாற்றுப் பின்னணி உள்ளிட்ட விவரங்களைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பழமையான கல்வெட்டின் மேற்பகுதியில் தகவல் பலகையாக வைக்கப்பட்டுள்ளது. இதைப் பாளையங்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ச.அந்தோணிசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது வே.ராஜகுரு, சு.சிவகுமார் ஆகியோருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் திருத்தல அதிபர் அந்தோணி குரூஸ் செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஆலய முன்னாள் பங்குத்தந்தையர் அருள் அம்புரோஸ், அந்தோணிசாமி, மறைமாவட்ட செயலக முதல்வர் ஞானப்பிரகாசம், கோவில்பட்டி வட்டார அதிபர் மோட்சராஜன், கோவில்பட்டி பங்குத்தந்தை சார்லஸ் உள்ளிட்ட பங்குத்தந்தையர்கள் மற்றும் இறைமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story

தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்-ஓட்டுநரால் தப்பிய பயணிகள்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Omni bus catches fire - passengers luckily escape

சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவை செல்லும் தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு  சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை  ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை ஓட்டுநர் கார்த்திகேயன் இயக்கிய நிலையில், பயணிகளில் சிலர் ஆங்காங்கே அவர்களுக்கு தேவையான இடங்களில் இறங்கினர்.

இந்நிலையில் சுமார் 15 பயணிகளுடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பஸ் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது, பஸ்சின் முன் பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கார்த்திகேயன், பஸ்சை உடனடியாக சாலையோரமாக நிறுத்தியதோடு, உள்ளே இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வெளியேற்றியுள்ளார். 

ஓட்டுநரின் இந்த துரித நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், பஸ் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார், தீயணைப்புத் துறை வீரர்கள் உதவியுடன் பஸ்சில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்ததோடு, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.