ராமநாதபுரம் மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்த மீனவ பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி ரேணுகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடல்பாசி எடுப்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை காலை வீட்டை விட்டு சென்ற நிலையில் மாலை வரை ரேணுகா வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வடகாடு காட்டுப்பகுதியில் அரை நிர்வாண நிலையில் ரேணுகாவை எரிந்த நிலையில் சடலமாக மீட்டனர். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அதேபகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலைபார்த்துவரும் வடமாநில இளைஞர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.
அதில் முன்னுக்குபின் முரணாக பதிலளித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள் அந்த இறால் பண்ணையை அடித்து நொறுக்கியதோடு தீவைத்தனர். அந்த 6 வடமாநில இளைஞர்களையும் பொதுமக்கள் தாக்கினர். இந்த சம்பவத்தில் கொலையான ரேணுகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்ப போலீசார் முற்பட்ட போது முதலில் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுங்கள் என அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். தாக்குதலுக்கு உள்ளான ஆறு பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் வடமாநில இளைஞர்கள் மூன்று பேர் ரேணுகாவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்ததும், அடையாளம் தெரியாமல் இருக்க அவரது உடலை எரித்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வடகாடு பகுதிகளில் இயங்கி வரும் இறால் பண்ணைகளை மூட வலியுறுத்தி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இறால் பண்ணைக்கு மட்டும் அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர். மீனவ கிராம பெண் வடமாநில இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.