திருச்சி, பஞ்சப்பூரில் அமைந்துள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு முதலுதவி குறித்த பயிற்சி முகாமானது நேற்று நடைபெற்றது. இப்பயிற்சிக்கு சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஸ்ரீ சத்திய சாயி சேவா பேரிடர் மேலாண்மை அமைப்பின் பயிற்சியாளர் நாராயணசாமி மற்றும் நவீன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளித்தனர்.
இப்பயிற்சி முகாமில் 10 மாணவிகள் உட்பட 37 நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து நாராயணசாமி பேசுகையில், சாலையில் ஏற்படும் பல விபத்துக்கான முதன்மைக் காரணம் கவனக் குறைவுதான். தலைக்கவசம் இன்றியமையாததாகும். தலையில் அடிபட்டவர்களுக்கு போடப்படும் தலைக்கட்டு மற்றும் வாயிலிருந்து ரத்தம் வரும்பொழுது போடப்படும் கட்டுகள் பற்றி மாணவர்களுக்கு பயிற்சி பற்றி விளக்கினார். மின்சார அதிர்ச்சி மற்றும் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டவர்களுக்கான முதலுதவி முறைகள் மற்றும் கைகால் வலிப்பு வருவதற்கான காரணங்கள் செய்யவேண்டிய முதலுதவி முறைகளை விளக்கினார்.