வெடிமருந்தும், பட்டாசுகளும் சேர்ந்து பயங்கரமாக வெடித்ததில் வீடு தரைமட்டமானதுடன் தயாரித்த தொழிலாளியும் உடல் சிதறி பலியான சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி பகுதியிலுள்ள திருத்தங்கல் நகர் பகுதியைச் சேர்ந்த சத்திஸ்வரன். இவர் சிவகாசியின் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தவர். இவரது மனைவி ராமலட்சுமி. தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் சத்திஸ்வரன் தன் குடும்பத்துடன் தனது மனைவியின் சொந்த ஊரான தென்காசி மாவட்டத்தின் திருவேங்கடம் வட்டத்திற்குட்பட்ட கொக்குகுளம் கிராமத்தில் குடியேறியிருக்கிறார். அங்கிருந்தபடியே சிவகாசி பட்டாசு ஆலைக்குச் சென்று வேலை பார்த்து வந்தார். பின்னாளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பதற்கான வெடி மருந்துகள் உள்ளிட்ட மூலப்பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து தன் மாமனாருக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் வைத்து ரகசியமாக பேன்சி பட்டாசுகளைத் தயார் செய்து விற்பனை செய்து வந்திருக்கிறார்.
சத்திஸ்வரன் பட்டாசுகள் தயாரிக்க, வெடி பொருட்களை சேமித்து வைக்க, விற்பதற்கு, வாங்குவதற்கு அவைகளுக்கான அனுமதியும் பெறவில்லை என்கிறார்கள் கிராமத்தினர்.
இந்த நிலையில், நேற்று காலை நேரம் அந்த வீட்டில் சத்திஸ்வரன் பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். அது சமயம் எதிர்பாராத வகையில் திடீரென தயாரிப்பு மருந்து கலவைகளில் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடிமருந்து கலவையும் இருப்பு வைத்திருந்த பட்டாசுகளும் மொத்தமாய் வெடித்துச் சிதறின. இதில் அந்த வீடு அடியோடு இடிந்து தரைமட்டமானது. தயாரிப்பிலிருந்த சத்திஸ்வரன் உடல் வேறு கைகள் வேறாய் சிதறிய நிலையில் சம்பவ இடத்திலேயே பலியாகி இருக்கிறார். அது போக இந்த வெடி விபத்தின் தாக்கத்தால் அருகிலுள்ள 100 மீட்டர் தொலைவிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த வீடுகளும் அதிர்ந்து விரிசல் கண்டுள்ளன. அதுசமயம் வீட்டினருகே நின்று கொண்டிருந்த அவரது மனைவி ராமலட்சுமியும் படுகாயமடைந்தார். தகவலறிந்த மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமார், ஆட்சியர் கமல்கிஷோர், கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.