Skip to main content

தீ விபத்து சம்பவம்; தமிழர்களின் உயிரிழப்பு உயர்வு!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Fire incident; The toll of Tamils ​​is on the rise

குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் நேற்று (12.06.2024) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த கட்டடத்திலிருந்த 195 பேரில் 175 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் தான் இந்தத் தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். அதே சமயம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் என்பவரின் நிலை குறித்தும் தெரியவில்லை என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இவர் அங்குள்ள தரக் கட்டுப்பாட்டு அலுவலராக பணிபுரிந்து வருகிறார் எனவும் சொல்லப்பட்டது. 

Fire incident; The toll of Tamils ​​is on the rise

இது தொடர்பாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்தியத் தூதரகம் மூலம் உயிரிழப்பு நிலவரம் அதிகாரப்பூர்வமாகத் தகவல் வரவில்லை. அதே சமயம் தமிழ்ச் சங்கம் மூலம் விவரம் சேகரிக்கப்பட்டது. 

அதன்படி இந்தத் தீ விபத்தில் கருப்பண்ணன் ராமு, வீராசாமி மாரியப்பன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, முகம்மது ஷரீப், புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகிய 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர் என அங்குள்ள தமிழ்ச்சங்கங்கள் கூறியுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்களைத் தமிழகம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் குவைத் அடுக்குமாடிக் குடியிருப்பு தீவிபத்தில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் திருச்சியைச் சேர்ந்த ராஜூவ் எபினேசர் என்பவரும் ஒருவர் ஆவார். உயிரிழந்த தமிழர்களின் உடல்களைச் சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்