
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அருகே ஓடுகிறது பெண்ணை ஆறு. இதன் அருகில் உள்ளது சீர்பாத நல்லூர். இந்த பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான கோவிந்தன் என்பவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இவரது சகோதரியின் ஊர், ஆற்றுக்கு அக்கரையில் உள்ள அய்யம்பாளையத்தில் உள்ளது. அங்கு தினசரி சென்று சாப்பிட்டுவிட்டு, தன் ஊருக்குத் திரும்பி வருவது கோவிந்தனின் வழக்கம். அதன்படி நேற்று மதியம் 2 மணி அளவில் பெண்ணை ஆற்றைக் கடந்து சகோதரி ஊருக்குச் சாப்பிடச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்துள்ளது.
ஆற்றின் நடுவில் சிக்கிக் கொண்ட கோவிந்தன், வெள்ள நீரில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். கோவிந்தன் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதை அப்பகுதியில் இருந்தவர்கள் கவனித்ததோடு அவரைக் காப்பாற்றவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. உடனே மணலூர்பேட்டை போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த மணலூர்பேட்டை போலீசார், பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறை மூலம், இரவு 7 மணி வரை ஆற்றோரப் பகுதிகளில் தேடி பார்த்தும் கோவிந்தன் கிடைக்கவில்லை. மேலும் போலீசார், தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள். இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.