Skip to main content

நிதி நிறுவன மோசடி வழக்கு; சுபிக்‌ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

Financial Institution Fraud Case; 20 years in jail for Subiksha Subramanian

 

சென்னை அடையாறு பகுதியில் ‘விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டு பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், முதலீடுகளுக்கு அதிகமான வட்டி தருவதாக கூறியதை நம்பிய பல பேர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த நிறுவனம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு புகார் அளித்தார்.

 

அவர் அளித்த அந்த புகாரின் பேரில், விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள் என 17 நிறுவனங்களின் இயக்குநர்களான சுபிக்‌ஷா சுப்பிரமணியன், நாராயணன், ராஜரத்தினம், பாலசுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்பட 17 பேர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இதனை தொடர்ந்து, காவல்துறையினர் கடந்த 2020 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் இந்த நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையின் போது இயக்குநர்கள் நாராயணன், ராஜரத்தினம், ராமசாமி ஆகியோர் உயிரிழந்தனர். தலைமறைவான அப்பாதுரை, இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (20-11-23) நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘இந்த வழக்கில் தொடர்பான சுபிக்‌ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஸ்ரீவித்யாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்ற இயக்குநர்கள் மற்றும் ஊழியர்கள் 9 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், அவர்களுக்கு ரூ.191.98 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம், இதில் 180 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஜாமீனில் விடுதலை!

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

BJP executive Amar Prasad Reddy released on bail

 

அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டிற்கு அருகே கொடிக் கம்பம் நடும் விவகாரத்தில் அதிகாரிகள் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் மீது தாக்குதலில் ஈடுபட்டதாகக் கட்சியின் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனுவை  விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்தியதற்காக எத்தனை நாட்கள் சிறையில் வைத்திருப்பீர்கள். சேதப்படுத்தப்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளர்களுக்கு பனிரெண்டாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். மேலும் 55 அடி உயரக் கம்பத்தில் கொடி கண்ணுக்கு தெரியாது. காக்கா, குருவி உட்கார மட்டுமே அந்தக் கொடிக் கம்பம் பயன்படும் எனத் தெரிவித்ததோடு மீண்டும் கொடிக் கம்பம் அமைக்கமாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நிபந்தனை விதித்து அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கினார்.

 

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதையடுத்து, அமர்பிரசாத் ரெட்டி புழல் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதுடன் நேராக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்த அமர்பிரசாத் ரெட்டிக்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகளை பறிக்கும் திமுக அரசு” - இ.பி.எஸ் கண்டனம்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

EPS condemns DMK government for taking away religious rights of jail inmates

 

“தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகள், அவர்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறைச் சாலைகள் என்பது தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கும் இடம் மட்டுமல்ல, அவர்களை நல்வழிப்படுத்தும் இடங்களுமாகும். கடந்த 29 மாத திமுக ஆட்சியில், சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக செய்திகள் வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படுவதாக நாளிதழ்களில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

 

எந்த மதத்தைச் சார்ந்த சிறைக் கைதியாக இருந்தாலும், ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கு வழிபாட்டு உரிமைகள் வழங்கப்பட்டு வந்தன. குறிப்பாக, வேலூர் மத்திய சிறைச் சாலையில் காலம் காலமாக இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகள், அவர்களுடைய மத நம்பிக்கையின்படி வழிபடுவதற்கு பிரத்யேக இடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலும் இந்த நடைமுறை தொடர்ந்தது.

 

அந்தந்த மத குருமார்கள், பண்டிகை காலங்களில் சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு சிறப்புப் பிரார்த்தனை செய்து நல் எண்ணங்களை வளர்க்கவும், கைதிகளின் நலனுக்காக பிரார்த்தனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், சிறைவாசிகளிடையே இந்த வைரஸ் தொற்று பரவக்கூடாது என்பதால், சிறைச் சாலைகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை ஏற்படுத்தப்பட்டது.

 

இந்த திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின்பு, கொரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகும் ஏதோ ஒரு காரணத்தால் சிறைகளில் மத வழிபாடுகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் வேலூர் (தொரப்பாடி) மத்திய சிறைச் சாலைக்குள் மூன்று வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. அதில் இரண்டு மத வழிபாட்டுத் தலங்களை தற்போது வழிபாட்டுக்கு அனுமதித்துவிட்ட சிறை நிர்வாகம், இஸ்லாமிய சிறைவாசிகள் தொழுகை நடத்தும் மசூதியை மட்டும் திறக்காமல் மூடி வைத்துள்ளது. இதனால், வேலூர் சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

 

திமுக ஆட்சியாளர்கள், சிறைவாசிகள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். எனவே, தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகள், அவர்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று இந்த  திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்