Skip to main content

நிதிநிறுவன மோசடி: தலைமறைவான ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது!

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

Financial fraud; Mysterious helicopter brothers arrested

 

கும்பகோணத்தில் நிதிநிறுவனம் என்கிற பெயரில் பல கோடி மோசடி செய்து தலைமறைவான பாஜக பிரமுகர்கள் கணேஷ் மற்றும் சுவாமிநாதனை போலீஸார் கைது செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் தீட்சதர் தெருவைச் சேர்ந்தவர்கள் கணேஷ் - சுவாமிநாதன் சகோதரர்கள். இவர்கள் விக்டரி என்கிற பெயரில் நிதி நிறுவனங்களையும், வெளிநாட்டு மாடுகளைக் கொண்டு மூன்று இடங்களில் பால் பண்ணையும், ஹெலிகாப்டரை வாடகைக்கு விடுவது என பல தொழில்களை செய்துவந்தனர். எப்போதும் இரு சகோதரர்களும் ஒன்றாகவே ஹெலிகாப்டரில் வலம் வந்ததால், இவர்களை ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்ற பெயரிலேயே பலரும் அழைத்தனர்.

 

இவர்களது நிதி நிறுவனத்தில், ஒன்று கொடுத்தால் மூன்று என்பது போல அதிரடியான கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்ததும், பலதரப்பட்ட மக்களும் கோடிக்கணக்கில் முதலீடாக கொடுத்தனர். அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு ஒரு அட்டை மட்டுமே உத்தரவாதமாக (surety) அளித்துள்ளனர். இதற்காக அவர்களுக்குப் பல்வேறு தரப்பினரும் ஏஜெண்டுகளாக செயல்பட்டுள்ளனர். ஏஜெண்டுகளே கோடிக்கணக்கில் கமிஷனாக பெற்றுள்ளனர். ஆரம்பத்தில், கொடுத்த வாக்குறுதிகளுக்கேற்றவாறு திருப்பிக் கொடுத்தனர். அதோடு ஹெலிகாப்டர் நிறுவனம் துவங்கும்போது கும்பகோணத்தில் மருத்துவமணைக்கு அருகில் உள்ள பிரபல்யமான ஹோட்டலில் முகவர்கள், முதலீடு செய்தவர்கள் என பலரையும் அழைத்து விருந்துவைத்ததோடு தங்க நாணயங்களையும் பரிசுகளாக வழங்கி பலதரப்பட்டவர்களையும் கவர்ந்தனர். ஒருகட்டத்தில் இருவரும் கொடுத்ததைத் திருப்பித்தராமலும், கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமலும் இழுத்தடிக்க துவங்கினர்.

 

adfdsf

 

இதற்கிடையில், பாதுகாப்புக்காக பாஜகவில் ஐக்கியமாகி பல கூட்டங்களில் கலந்துகொண்டதோடு, வேல் யாத்திரை வந்த அப்போதைய பாஜக மாநில தலைவர் முருகனுக்கு உபசரிப்பு செய்ததோடு, அவருக்கு லட்சக்கணக்கான நிதியும் கொடுத்ததாக அப்போது பாஜகவில் பேசப்பட்டது. அதேபோல் கருப்பு முருகானந்தம், எச். ராஜா உள்ளிட்டவர்களும் இரு சகோதரர்களோடு நெருக்கமாக இருந்தனர். இந்த நிலையில், பணம் கொடுத்து ஏமாந்தவர்களுள் ஒருவரான ஜபருல்லா - பைரோஸ்பானு தம்பதியினர், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மாவட்ட எஸ்.பி. என பல அதிகாரிகளிடமும் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையைத் துவங்கினர். இதற்கிடையில் இரு சகோதரர்களும் தலைமறைவாயினர். கணேஷின் மனைவி அகிலாண்டேஸ்வரி, கணக்கராக இருந்த வெங்கடேஷ், மேனேஜராக இருந்த ஸ்ரீதரன், அவரது சகோதரி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைதுசெய்தனர். அதோடு வீட்டிலிருந்த 11 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

 

இருவரையும் போலீசார் தீவிரமாக தேடிவந்தபோதும், ஹெலிகாப்டர் சகோதரர்கள் வெளிநாடு தப்பிவிட்டனர்; தனித்தீவுக்குச் சென்றுவிட்டனர் என்கிற செய்திகளும் பரபரப்பாக பேசப்பட்டன. ஆனால், நமது நக்கீரனில் ‘இந்த விசாரணையில் எங்கோ தவறு நடக்கிறது. இருவரும் வெளிநாடு செல்ல வாய்ப்பே இல்லை. தஞ்சை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் தலைமறைவாக இருக்கின்றனர்’ என எழுதியிருந்தோம். நாம் சொன்னது போலவே புதுக்கோட்டையில் தலைமறைவாக இருந்த இரண்டு சகோதரர்களையும் இன்று (06.08.2021) போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் வருகை; பக்தர்கள் அவதி!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Governor's visit to Thiruphuvanam Kambakareswarar Temple; Devotees suffer

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (02.02.2024) குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி வருகையால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், தரிசனத்துக்கு தாமதமாவதாக பக்தர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தரிசனத்துக்குப் பின்னர்தான் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.