
கோவையில் குடிபோதையில் போக்குவரத்து உதவி ஆய்வாளரிடம் ரகளையில் ஈடுபட்ட சுதர்சன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். ரகளையில் ஈடுபட்ட நபர் காவல்துறையினரிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோவையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சுதர்சன். தனியார் நிறுவன ஊழியரான இவர் வெள்ளிக்கிழமை மாலை குடிபோதையில் காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில சென்று கொண்டு இருந்தார். அப்போது வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரிச்சர்டு, சுதர்சனை நிறுத்தினார்.
அப்போது குடிபோதையில் இருந்த சுதர்சன் போக்குவரத்து ஆய்வாளர் சுதர்சனிடம், நீதிபதியின் உறவினர் எனக்கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் ரிச்சர்டு ரத்தினபுரி காவல்நலையத்தில் புகார் அளிக்கவே, குடிபோதையில் இருந்த இளைஞர் சுதர்சனை கைது செய்து அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலைமிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் போதை தெளிந்த பின்னர் சுதர்சன் காவல்துறையிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோவையும் காவல் துறையினர் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சுதர்சன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.