சென்னையில் ஆவடி அருகே தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிச் சென்ற காவலர் ஒருவர் தலைக்கவசம் அணியுமாறு கூறிய இளைஞரை ஒருமையில் பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் என ஆக்கப்பட்ட பிறகு காவல்துறையினர் ஆங்காங்கு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை நியு ஆவடி சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சக வாகன ஓட்டியான காவலரிடம் ஹெல்மட் அணியுமாறு கூறியுள்ளார் என தெரிகிறது.
இதனை தொடர்ந்து வழியில் தன்னிடம் தலைக்கவசம் அணியுமாறு கூறிய வாகன இளைஞரை நிறுத்திய காவல் அதிகாரி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அந்த வீடியோ பதிவில் இளைஞர் உங்கள் நல்லதிற்கு தானே சொன்னேன் எனக் கூறவும் அந்த காவலர், “நான் தான் பாத்துக்குறேன்னு சொல்றேன்ல உனக்கு எதும் பிரச்சனையா. நான் ஹெல்மட் போடுவேன் போட மாட்டேன் உனக்கு என்ன பிரச்சனை? நீ ஹெல்மட் போட சொன்னது தப்பு தாண்டா போ”என கூறுகிறார். காவலர் சீருடையில் இருக்கும் அந்த காவலர் இளைஞரை மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது.