Fetal detection gang arrested

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மகேந்திரமங்கலம் கிராமத்தில் சட்டவிரோதமாகக் கருவின் பாலினத்தைக் கண்டறியும் கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. இது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில் தான் கருவின் பாலினம் கண்டறியும் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி இடைத்தரகர் வடிவேல், கற்பகம் ஆகியோரை ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநர் சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடமிருந்து பாலினம் கண்டறியும் இயந்திரம், ரூ. 18 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக பெண்களின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் கும்பல் ஒன்று கடந்த மாதம் 25ஆம் தேதி (25.07.2024) தர்மபுரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது இந்தக் கும்பலை மருத்துவத்துறை அதிகாரிகள் சினிமா படப் பாணியில் விரட்டி பிடித்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.