மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடற்கூறாய்வில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் சம்பவத்தன்று இரவு நேர பணிக்காக வந்திருந்தார். அடுத்த நாள் காலை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக பெண் மருத்துவரின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணை அடிப்படையில் சஞ்சய் ராய் என்றவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்பொழுது பெண் பயிற்சி மருத்துவரின் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. உயிரிழந்த பயிற்சி பெண் மருத்துவரின் இடுப்பு, உதடு, விரல்கள், இடது கால் ஆகியவற்றில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பொழுது கத்தி கூச்சல் எழுப்பாமல் இருப்பதற்காக மாணவியின் கழுத்து நெறிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனால் தொண்டை பகுதியில் சுற்றி உள்ள மூச்சுக்குழாய் தைராய்டு குருத்து எலும்பு முறிந்ததுள்ளது. அதேபோல் பிறப்புறுப்பில் ஆழமான காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் கொல்கத்தா நீதிமன்றம் சம்பவம் நடந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வரை பதவியில் இருந்து விலக அறிவுறுத்தியுள்ளது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பயிற்சி மருத்துவர் கொடூர முறையில் பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.