Published on 20/05/2022 | Edited on 20/05/2022

பழனி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது, தங்க நகைகளை நூதன முறையில் திருடிய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலில் கார்த்திகை மண்டபத்தில் கடந்த புதன்கிழமை அன்று, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது, பாக்கியலட்சுமி என்ற ஊழியர் 10.8 கிராம் எடை கொண்ட தங்க நகையை நூதனமாக திருடியுள்ளார். காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள், இதனை கண்டு கோயில் நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகத்தினர், ஊழியர் பாக்கியலட்சுமியிடம் சோதனை செய்ததில், காலில் தங்க நகையை மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், பாக்கியலட்சுமியை கைது செய்துள்ளனர்.