Skip to main content

மழைநீரில் மூழ்கி பெண் மருத்துவர் பலி! மரக்கட்டைகளை சாலையில் கொட்டி போராட்டம்!!

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

jk


மழை நீரில் மூழ்கி பெண் மருத்துவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று (17.09.2021) நல்ல மழை பெய்த நிலையில், வெள்ளனூர் பகுதி ரயில்வே தரைப்பாலத்திற்கு கீழே இடுப்பளவு தண்ணீர் தேங்கியிருந்தது. இந்த வழியாக பெண் மருத்துவர் ஒருவர் தனது மாமியாரோடு சென்றுள்ளார். அப்போது கார் பாதி தூரத்தைக் கடந்த நிலையில், வண்டியின் சைலென்சரில் நீர் புகுந்ததால் வண்டி நடுவழியில் நின்றது. இதனால் வண்டிக்குள் நீர் புக ஆரம்பித்தது.

 

ஒரு கட்டத்தில் கார் மூழ்கும் அளவுக்கு நீரின் அளவு அதிகரித்ததால் அந்தப் பெண் மருத்துவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார். அவருடன் வந்த அவரது மாமியார் நீச்சலடித்துத் தப்பித்துள்ளார். மருமகளைக் காப்பாற்ற முயன்றும், அவரால் அது முடியாமல் போனதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே இன்று காலை அந்த இடத்தில் கூடிய அப்பகுதி மக்கள், நீண்ட நாட்களாக பாலம் கட்டிக்கொடுக்க கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் அதற்கான முயற்சியில் ஈடுபடாததைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். சாலையில் ஒரு லாரி மரக்கட்டைகளைக் கொண்டுவந்து கொட்டிப் போராட்டம் நடத்திவருகிறார்கள். இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மம்தா பானர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Doctor explains Mamata Banerjee's health

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது.

Doctor explains Mamata Banerjee's health

அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டிருந்தது. மம்தா பானர்ஜி கொல்கத்தா வூட்பர்ன் பிளாக்கில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Doctor explains Mamata Banerjee's health!

இந்நிலையில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான மணிமோய் பந்தோபாத்யாய் கூறும்போது, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (14.03.2024) இரவு 07:30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் இருந்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக வீட்டில் அவர் விழுந்த தடயம் உள்ளது. இதனால் அவரது பெருமூளை அதிர்ச்சி ஏற்பட்டு நெற்றியிலும் மூக்கிலும் கூர்மையான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆரம்பத்தில் முதலில் மூளை மற்றும் நரம்பியல், மருந்தவியல் மற்றும் இதயவியல் ஆகிய துறையின் தலைமை மருத்துவர்கள் குழுவினரை கொண்டு, உடல் நிலை குறித்து பரிசோதித்து உறுதிபடுத்தப்பட்டது.

Doctor explains Mamata Banerjee's health!
மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய்

நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டன. ஈ.சி.ஜி., சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மம்தா பானர்ஜி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்ல விரும்பினார். இதனால் அவரை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் மருத்துவர் குழுவின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். அவருக்கு நாளை (15.03.2024) மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.