பெண் காவலர்கள் குறித்த அவதூறாகப் பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
அதே சமயம் பெண் காவலர் குறித்து அவதூறு செய்தியை ஒளிபரப்பிய புகாரின் பேரில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த ரெட்பிக்ஸ் யூட்டியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட்டை கடந்த மாதம் 10 ஆம் தேதி இரவு டெல்லியில் வைத்து திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர், திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அவரும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து இன்று காலை 9:30 மணி அளவில் அவர், பிணையில் விடுவிக்கப்பட்டார். மேலும், அவர் வார நாட்களில் செவ்வாய்க்கிழமை தோறும் காலை 10:30 மணிக்குக் கோயம்புத்தூர் டவுண் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.