மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் குடித்துவிட்டு ரகளை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அச்சத்தில் உள்ள கல்லூரி மாணவிகள் கல்லூரியின் காம்பவுண்ட் சுவற்றின் மீது ஏறி குறித்து கல்லூரிக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலூர் அரசு கல்லூரி அருகே 120 மாணவிகள் தங்கும் வகையில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் நல விடுதி கட்டப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகள் கல்லூரிக்கு செல்லும் பொழுது அந்த வழியில் குடித்துவிட்டு திரியும் சில நபர்கள் மாணவிகளை கேலி கிண்டல் செய்வதோடு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக மாணவிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மாணவிகள் கல்லூரிக்கு வாயில் வழியாகச் செல்லாமல் குடிகாரர்களுக்கு பயந்து கொண்டு கல்லூரியின் காம்பவுண்ட் சுவரை மீதி ஏறி குதித்து கல்லூரிக்கு செல்லும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் மட்டுமல்லாது சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.