Skip to main content

மகனின் வெறிச்செயலால் இறந்த தந்தை:... பதறிய உறவினர்கள்!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

Father who passed due to son's hysteria: shocked relatives

 

அரூர் அருகே, சொத்து தகராறில் தந்தையின் தலைமீது அம்மிக்கல்லைப் போட்டு கொடூரமாக கொலைசெய்த மகனைக் காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வேப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வெளாம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (80). விவசாயியான இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சின்னகண்ணு (67). இவர்களுக்கு வெங்கடேசன் (37) என்ற மகனும், சென்னம்மாள் (32) என்ற மகளும் உள்ளனர். இவருடைய இரண்டாவது மனைவி கோவிந்தம்மாள் (65) என்பவருக்கு பழனி (30), ராமன் (27) ஆகிய இரு மகன்களும், வேடியம்மாள் என்ற மகளும் உள்ளனர். மகளுக்குத் திருமணமான நிலையில், கோவிந்தம்மாள் தனது இளைய மகன் ராமனுடன் கோவையில் வசித்துவருகிறார். 

 

மூத்த மகன் பழனி, உள்ளூரில் வசிக்கிறார். வேலைக்குச் செல்லாமல் இருந்துவருகிறார். ஜெயராமன், அதே ஊரில் தனியாக ஒரு குடிசை அமைத்து வசித்துவந்தார். இவருக்குச் சொந்தமாக 9 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தைப் பாகம் பிரிப்பது தொடர்பாக ஜெயராமனுக்கும், இரண்டாவது மனைவியின் மகன் பழனிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊர் பஞ்சாயத்தார் முன்னிலையில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியபோதும், நிலத்தைப் பாகம் பிரித்துத்தர ஜெயராமன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருந்த பழனி, ஜூன் 13ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில், ஜெயராமன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றார். அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த தந்தையை அரிவாளால் தலை, கைகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். 

 

மேலும், அவருடைய தலை மீது அம்மியின் குழவிக்கல்லைப் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ஜெயராமன் பலியானார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ஊர்மக்கள் கூடியதைப் பார்த்ததும், அங்கிருந்து பழனி தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  இந்நிலையில், உள்ளூரில் உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த பழனியை ஜூன் 13ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். சொத்துத் தகராறில் தந்தையைக் கொலை செய்ததாக பழனி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் வெளாம்பட்டி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்