கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கோட்டலாம்பாக்கத்தை சேர்ந்தவர் ஹரி பாஸ் (36), ஆட்டோ ஓட்டுனர். இவருக்கு சொந்தமான ஆட்டோவில் இன்று காலை புதுப்பேட்டையிலிருந்து சவாரி ஏற்றிக் கொண்டு பண்ருட்டி வந்தார். பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு மீண்டும் புதுப்பேட்டைக்கு திரும்பினார். அப்போது ஆட்டோவை அவரது மகன் சச்சின் டிராவிட் (18) ஒட்டி வந்தார். ஆட்டோ பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு அருகே வந்தபோது அங்கு போக்குவரத்து சீரமைப்பு பணியிலிருந்த போக்குவரத்து போலீசார் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் ஆட்டோவை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக ஆட்டோ சாவியை எடுத்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது திடீர் என்று ஆட்டோ டிரைவர் ஹரி பாஸ் அவரது மகனுடன் ஆட்டோ மீது ஏறி நின்று கொண்டு தயாராக ஆட்டோவில் இருந்த டீசல் கேனை எடுத்து அதிலிருந்த டீசலை உடல் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்து கொளுத்திக் கொள்ள முயன்றனர்.
அப்போது அங்கு பணியிலிருந்த போக்குவரத்து காவலர் ஞானம் அவர்களை காப்பாற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.