பெண்களுக்கான திருமண வயது 21 என்ற புதிய சட்டத்தை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த காலங்களில் பெண்கள் வயதுக்கு வருவது 16 வயதிற்கு மேல் வருவார்கள், ஆனால் தற்போது மரபணு மாற்றப்பட்ட விதையினாலும், பிராயிலர் கோழியினாலும் இளம்பெண்கள் 10, 12 வயதுகளிலேயே பூப்படைந்துவிடுகின்றனர்.
அவ்வாறு இருக்கும் நிலையில், பெற்றோர் தம் இளம்பெண்களை 18 வயதுவரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பாதுகாப்பாக வைத்திருப்பது கடுமையான நிலையில் உள்ளது. அவ்வாறு குறைந்த வயதில் பெண்களைத் திருமணம் செய்தால், திருமணமான பெண்களைக் காப்பகம் என்னும் சிறையில் அடைத்தும், திருமணம் செய்த ஆண்களையும், அவர்களின் பெற்றோர்களையும், உற்றார் உறவினர்களையும் காவல் நிலையங்களில் வழக்குப் பதிந்து சிறையில் அடைக்கும் அவல நிலை ஏற்படும்.
எனவே, இந்த நிலைமை ஏற்படாமல் இருக்க புதிதாக கொண்டுவந்துள்ள பெண்கள் திருமண சட்டம் 21 வயது என்பதை 18 வயதாக மாற்றக் கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் இன்று (20.12.2021) காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.