Skip to main content

கொட்டித்தீர்த்த மழை: வேதனையில் விவசாயிகள், மகிழ்ச்சியில் மக்கள்!

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

 Farmers in pain, people in joy

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் பலமணி நேரமாக மழை பெய்துவருகிறது. குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு ஆயத்தமாக இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், அறுவடைக்காகக் காத்திருக்கும் விவசாயிகள் வேதனையில் உறைந்துள்ளனர்.

 

தமிழ்நாட்டில் சில நாட்களாக மழை பெய்துவருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படியே நேற்று (22.08.2021) நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காலையில் வெயில் வாட்டிவந்த நிலையில், பகல் 11 மணிக்கு மேல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்த்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பெய்த பலத்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவுகிறது.

 

மேலும், முன்குறுவை சாகுபடி செய்து அறுவடைக்காகக் காத்திருக்கும் விவசாயிகள் மழையினால் பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து கிடப்பதைக் கண்டு வேதனை அடைகின்றனர். அதேநேரம், பின்குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளோ பயிர்களுக்குப் பொருத்தமான மழை என மகிழ்கின்றனர். இதேபோல் சம்பா சாகுபடி தொடங்கியுள்ள விவசாயிகளும் மழைப் பொழிவினால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.