நாகை மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பயிரிட்டிருந்த விளைநிலங்களில் அறுவடையை முடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அடுத்த விதைப்புக்காக தற்போது அவர்களின் நிலத்தை தயார்படுத்தி வருகின்றனர்.
அதிக மகசூலுக்காகவும் அதிக விளைச்சலுக்காகவும் பெரும்பாலும் ரசாயன உரங்களையே விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இது மண்ணுக்கு கேடு என தெரிந்திருந்தும் விவசாயிகள் ரசாயன உரங்களைப் பயன்படுத்தும் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தற்போது நாகை மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது அறுவடையை முடித்து அடுத்த விதைப்புக்காக நிலத்தை தயார்ப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரசாயன உரத்திற்கு மாற்றாக இம்முறை இயற்கை உரத்தைப் பயன்படுத்த முடிவுசெய்துள்ளனர். இதற்காக ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து அதிகளவிலான செம்மறி ஆடுகளை நாகை மாவட்டத்திற்கு கொண்டுவந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கும்போது, “எங்கள் நிலங்களில் தற்போது அறுவடையை முடித்திருக்கிறோம். அடுத்த விதைப்பாக நிலத்தை தயார்படுத்தி வருகிறோம்.
ரசாயன உரம் மூலம் நம் மண்ணிற்கும், நமக்கும் கேடுதான் விளையும். அதனால், இம்முறை அதனை மாற்றுவதற்காக இந்த ஆடுகளை, அறுவடை முடிந்த எங்கள் விளைநிலங்களில் மேய்ச்சலுக்காக விட்டிருக்கிறோம். தற்போதுவரை 200 ஆடுகளை இங்கு கொண்டுவந்திருக்கிறோம். இந்த ஆடுகள் இந்த நிலங்களில் மேய்ந்து அதன் கழிவுகளை அதே நிலத்திலேயே விடும். இதன்மூலம் இயற்கை உரம் செறிவூட்டிய நிலமாக இந்த நிலம் மாறும்” என்று தெரிவிக்கின்றனர்.