Skip to main content

நெற்றியில் ஒற்றை ரூபாய் வைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! 

Published on 19/04/2022 | Edited on 19/04/2022

 

Farmers demand with single rupee on forehead!

 

ஒன்றிய அரசைக் கண்டித்து நெற்றியில் சந்தனம் தடவி ஒற்றை நாணயத்தை வைத்துக்கொண்டு விவசாயிகள் வயலில் இறங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


நாகை மாவட்டத்தில் சம்பா, தாளடி, குறுவை நெற்பயிர்கள் பருவம் தப்பி பெய்த கனமழையால் முழுமையாக சேதமடைந்த நிலையில், ஒன்றிய குழு பார்வையிட்டு சென்ற பிறகும் ஒன்றிய அரசு இதுவரை நிவாரணம் மற்றும் காப்பீடு தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. மேலும், நெற்பயிர் பாதிப்புகளுக்கு 6248 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க ஒன்றிய அரசிற்கு தமிழக முதல்வர் கோரிக்கை வைத்த நிலையிலும், நிவாரணம் வழங்காத காரணத்தால் விவசாயிகள் ஊடு பயிர்களாக உளுந்து மற்றும் பச்சை பயிறு தெளித்து விவசாயம் மேற்கொண்டனர். 

 

Farmers demand with single rupee on forehead!

 

ஆனால், பருவம் தப்பிய கனமழை காரணமாக உளுந்து பயிர்களும் நாசமானது. இதனால் விவசாயிகள் நிவாரணம் மற்றும் காப்பீடு தொகை வழங்கவேண்டி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை ஒன்றிய அரசு எந்தவித நிவாரணமும் வழங்காததால், நாகையில் விவசாயிகள் இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 


பாலையூர் கிராமத்தில் வயலில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், நெற்றியில் சந்தனம் தடவி ஒற்றை ரூபாய் நாணயத்தை வைத்து ஒன்றிய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 2020-2021 ஆண்டுக்கான பயிர் உளுந்து காப்பீடு வழங்க வேண்டும், இந்த ஆண்டுக்கான நெற்பயிர் மற்றும் பயிர் உளுந்து காப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். விவசாயிகளின் இந்த நூதன போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.