/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2145.jpg)
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த இளமங்கலம் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இக்கிராமத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள், அக்கிராமத்தில் உள்ள ஓடைக்கு மறுபக்கம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையால் இளமங்கலம் கிராமத்திலுள்ள ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அக்கிராம விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட, விவசாய நிலங்களுக்குச் சென்று களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, ஆபத்தை உணராமல் அதி வேகமாக வெள்ளம் செல்லக்கூடிய ஓடையைப் பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் என அனைத்துத் தரப்பினரும் நீந்தியபடி கடந்து செல்கின்றனர். மேலும், விவசாய பணிகளுக்கான வேலையாட்கள், சாப்பாடு, குடிநீர், மாடுகளுக்குத் தீவனம், உர மூட்டைகள் உள்ளிட்டவற்றைபிளாஸ்டிக் வாட்டர் டேங்க்கைப் பயன்படுத்தி ஓடையைக் கடக்கின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_536.jpg)
கடந்த மூன்று தலைமுறைகளாகஇக்கிராமத்து விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரத்துக்காக இவ்வாறுதான் ஓடையைக் கடந்துதான் செல்கிறோம் என்றும், கடந்த ஆட்சியில் 7.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, மண் பரிசோதனை செய்து, இவ்வோடையில் மேம்பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேற்கொண்டு எதுவும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடுஅரசு, இக்கிராமத்தின் 100 ஆண்டுகால கோரிக்கையான மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென இக்கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதேபோல் விருத்தாசலம் அருகே பவழங்குடி கிராமத்தின் அருகேயுள்ள வெள்ளாற்றில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வெள்ளாற்றின் மறுகரையில் உள்ள கிராமத்திற்குச் செல்வதற்காக ஆபத்தை உணராமல் ஆற்றைக் கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. பவழங்குடி கிராமத்தில் நடக்கும் திருமணத்திற்காக, நெடுஞ்சேரி கிராமத்திலிருந்து வந்த உறவினர்கள் கரை புரண்டு ஓடும் வெள்ளாற்று வெள்ளத்தில் சர்வ சாதாரணமாக ஒத்தையடிப்பாதை போல் ஒருவர் பின் ஒருவர் அணிவகுத்து பெண்கள் ஆற்றைக் கடந்து செல்கின்றனர். மழை வெள்ள காலங்களில் இதுபோல் ஆற்றைக் கடக்க வேண்டிய ஆபத்தான நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையால் தாழ்வான பகுதியில் பொது மக்கள் வசிக்க வேண்டாம், ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிக்கை விட்டாலும், மாற்று வழி இல்லாததால் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவல நிலை பல கிராமங்களில் நிலவுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)