Skip to main content

'ஹைட்ரோ கார்பன் திட்டம்'- மத்திய அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்!

Published on 13/06/2021 | Edited on 13/06/2021

 

farmers association chief pandiyan pressmeet hydro carbon union government

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் அருகே வடத்தெரு பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தை இன்று (13/06/2021) தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேரில் பார்வையிட்டார்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர்.பாண்டியன், "மத்திய அரசு தொடர்ந்து காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க மறைமுக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் தமிழகத்தில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2019- ஆம் ஆண்டில் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அறிவித்தது.

 

அதனை தொடர்ந்து வேளாண் துறை மற்றும் மாசுக்கட்டுபாட்டுத்துறை சார்பில் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே (கருக்காகுறிச்சி) வடத்தெரு என்கிற கிராமத்தை மையமாக வைத்து ராமநாதபுரம் கடற்பகுதி வரையிலும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான தொகுப்பு ஒப்பந்தத்தை ஒற்றை சாளர முறையில் கோரப்பட்டுள்ளது. 

 

இதன் மூலம் ஒப்பந்தம் பெரு நிறுவனங்கள் பூமிக்கு கீழ் உள்ள மீத்தேன், ஹைட்ரோகார்பன் எரிவாயு, நிலக்கரி, கச்சா, நிலவாயு உள்ளிட்ட அனைத்தையும் ஒரே நிறுவனம் எடுத்துக் கொள்வதற்கு முழு அதிகாரம் வழங்கும் அடிப்படையில் ஒப்பந்தம் வழி வகுக்கிறது. பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் ஏல அறிவிப்பு தமிழக நலனுக்கு எதிரானது மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது. கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

 

மாநில அரசு தனது பட்டியலில் வேளாண்மை உள்ளதால் பேரழிவு திட்டங்களுக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்ட நிலையில், அதனை முடக்கும் நோக்கோடு மத்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களை ஒப்பந்தத்திற்கு கோருவது காவிரி டெல்டா விவசாயிகளை ஒடுக்க நினைக்கும் செயல் ஆகும். 

 

மத்திய அரசு திட்டமிட்டு பன்னாட்டு பெரும் நிறுவனங்களோடு டெல்டா விவசாயிகளை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இதன்மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் பேரபாயம் ஏற்பட்டிருக்கிறது. போராட்ட களத்திற்கு மத்திய அரசே விவசாயிகளை தள்ளுகிறது. ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிக்கிறது.

 

எனவே தமிழக முதலமைச்சர் புதிதாக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அமைச்சரவை அவசரமாகக் கூட்டி தற்போது அறிவிக்கப்பட்டு நடைமுறையிலுள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அரசாணையில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டி இருப்பின் அதனை செய்து சட்டம் குறித்து உண்மை நிலையை தமிழக, விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். 

 

பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிப்பதற்கு முன் கொடுத்த அனுமதிக்கான கிணறுகள் தோண்டப்படும் என்கிற தவறான செய்தி பரப்பப்படுகிறது; இது உண்மைக்கு புறம்பானது. 2016- ஆம் ஆண்டு முதல் காவிரி டெல்டாவில் எந்த ஒரு கிணறு தோண்டவும், எந்த நிறுவனத்திற்கும் தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மாநில அரசு ஒப்புதலின்றி எண்ணெய் நிறுவனங்கள் காவிரி டெல்டாவில் விளை நிலப்பகுதிகளில் பேரழிவு திட்டங்களுக்கு ஒப்பந்தம் கோருவது சட்டவிரோதம் என அறிவித்திட வேண்டும். மாநில அரசின் ஒப்புதல் இன்றி எண்ணை நிறுவனங்கள் ஒப்பந்தம் கோருவதற்கு தடை விதிக்க வேண்டும். வரும் 17- ஆம் தேதி பிரதமரை முதல்வர் சந்திக்கும்போது அமைச்சரவை முடிவை முதல்வரிடம் எழுத்துப்பூர்வமாக வழங்கி ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து கொள்கை நிலை குறித்து மத்திய அரசுக்கு தெரிவித்திட வேண்டும். 

 

போராட்டக் களத்தில் விவசாயிகள் தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லையேல் மீண்டும் தீவிர போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபடுவார்கள்" எனத் தெரிவித்தார்.


 

சார்ந்த செய்திகள்