Skip to main content

கருகிய நெற்பயிர்; மாரடைப்பால் உயிரிழந்த விவசாயி - நாகை சோகம்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

farmer passed away in Nagapattinam

 

திருக்குவளை அருகே கருகிய பயிரைக் காப்பாற்ற முடியாததால், கவலையில் பரிதவித்த விவசாயி ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (47) விவசாயியான இவர் நடப்புப் பருவத்தில் அவரது வயலில் குறுவை சாகுபடி செய்திருந்தார்.  சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகி சருகாவதைக் கண்டு கவலையில் உறைந்த ராஜ்குமார், வீட்டிலும், சக விவசாய நண்பர்களிடமும் நிலமையைக் கூறி புலம்பியிருக்கிறார்.

 

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வயலுக்கு சென்றவர் காய்ந்த நெற்பயிர்களை டிராக்டர்களைக் கொண்டு அழித்துவிட்டு சம்பா சாகுபடிக்கான பணிகளையாவது துவங்கலாம் என முடிவெடுத்து மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் வயலிலேயே மயக்கம் அடைந்த அவரை சக விவசாயிகள் மீட்டு திருக்குவளையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அங்கிருந்து உடனடியாக மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

திருக்குவளை அருகே கருகிய பயிரை காப்பாற்ற முடியாமல், கவலையில் இருந்து விவசாயி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே விவசாயி ராஜ்குமார் உயிரிழப்பு குறித்து, வேளாண்துறை, வருவாய்த்துறை, காவல்துறை விசாரணை செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“முதல்வர் ஸ்டாலின் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்” -  அய்யாக்கண்ணு

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Ayyakannu said that Cm Stalin should fast for kaveri issue  

 

திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் குறைகளை கோரிக்கைகளாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுவாக இன்று அளித்தனர். இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட பல விவசாயிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, காவல்துறையினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் மாவட்ட வருவாய் துறை அலுவலர் அபிராமி பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், “காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பது கிடையாது. இதனால் காவேரி டெல்டா விவசாயிகளை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் அல்லது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒரு லட்சம் கோடி நஷ்ட ஈடு வாங்கி காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

 

கடந்த 2021-ம் ஆண்டு குழுமணியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிக்கு நியாயம் கேட்டு 24 விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவராகிய என் மீது 6 வழக்குகளும், என் சங்கத்தை சார்ந்த விவசாயிகள் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

குறிப்பாக, திருவண்ணாமலை விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டதை போல என் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடுவதற்காக காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு காரணமான திருச்சி மாவட்ட துணை கமிஷனர் அன்பு மற்றும் காவல்துறையினரை கண்டிக்கின்றோம்” என்றார்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

கொள்ளிடம் ஆறு குப்பைகளின் கூடாரமாக மாறுகிறது - விவசாயிகள் வேதனை

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Kollidam River  becomes a tent of garbage – farmer agony

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் குறைந்த தண்ணீரைக் கொண்டும் கோடைக் காலத்திலும் வற்றாத ஆறாக ஓடுகிறது. இந்த ஆற்றின் இடது கரையோரத்தில் கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களாக பெரம்பட்டு, மேலக்குண்டலபாடி, ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதேபோல் ஆற்றின் வலதுகரை பகுதியில் அளக்குடி ஆச்சாள்புரம், படுகை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு மோட்டார் பம்பு செட்டை பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர்.

 

மேலும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சிதம்பரம், அண்ணாமலை நகர், கடலூர் அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றை இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குடிநீருக்கும் விவசாய பாசனத்திற்கும் முழுவதுமாக நம்பி உள்ளனர். இந்த மக்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும் கொள்ளிடம் ஆறு இருந்து வருகிறது.

 

ஆற்றில் மீன்வளம் உள்ளதால் இதனை நம்பி 50க்கும் மேற்பட்டவர்கள் துடுப்பு படகு மூலம் மீன் பிடித்து வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிறார்கள். ஆற்றில் புது தண்ணீர் வரும்போது மீன்கள் அதிக அளவு வரும். இதனைப் பிடிக்க பெரும் கூட்டமே கொள்ளிடம் ஆற்றில் திரண்டு இருப்பார்கள்.

 

இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் அல்லது வேறு இடங்களில் வசிப்பவர்கள் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் வீட்டின் கழிவுகள், குப்பைகள், மக்கா குப்பைகளை டிராக்டர் மூலம் எடுத்து வந்து லோடுலோடாக கொட்டி வருகிறார்கள்.

 

இது கொள்ளிடம் ஆற்றுக்கு மட்டுமல்ல பொதுமக்களின் குடிநீருக்கும், விவசாயிகளின் பாசனத்திற்கும், ஆற்றின் மீன்வளத்தையும் கடுமையாகப் பாதித்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட துணைச் செயலாளர் பழ. வாஞ்சிநாதன் கூறுகையில் “மழைக் காலங்களில் ஆற்றில் அதிக தண்ணீர் வரும்போது கரையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் மக்கா குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் தண்ணீரோடு அடித்துச் சென்று விவசாய நிலங்களுக்கு செல்லும்.

 

இதனால் மண் வளம் பாதிக்கப்பட்டு விளைநிலம் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு மகசூல் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் விவசாயக் கூலி தொழிலாளர்களும் வயலில் வேலை செய்யும்போது பிளாஸ்டிக் கழிவுகள் காலில் குத்தி பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுபோன்ற குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டக்கூடாது என அறிவுறுத்தி பொதுப்பணித்துறை சார்பில் பதாகை கூட வைக்கவில்லை.

 

மேலும் கொள்ளிடம் ஆற்றில் மனிதக் கழிவுகளை டிராக்டரில் எடுத்து வந்து பைப்பு மூலம் கொட்டுகிறார்கள். இது ஆற்றில் தண்ணீர் குடிக்கும் கால்நடைகளுக்கு நேரடியாக பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். மேலும் இந்த தண்ணீரை மறைமுகமாக குடிநீராகப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கும்  மர்ம நோய்களை ஏற்படுத்துகிறது.

 

கொள்ளிடம் ஆற்றில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைக் கண்காணிக்க பொதுப்பணித்துறை தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும். மனிதக் கழிவுகள், குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டக்கூடாது என எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும்” என்றார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்