Skip to main content

விவசாயியை வெட்டி கொன்றது ஏன்? கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்!

Published on 31/07/2022 | Edited on 31/07/2022

 

farmer incident police investigation gangavalli in salem district

 

கெங்கவல்லி அருகே, விவசாயியை கத்தியால் குத்தி கொலை செய்தது ஏன்? என்று கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். 

 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் சீனிவாசன் (வயது 42). லாரி ஓட்டுநரான இவர், விவசாயமும் செய்து வந்தார். இவருடைய அத்தை பங்காரு (வயது 66). 

 

இவர்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் பொதுச்சொத்தாக 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சீனிவாசன் மட்டும் ஏகபோகமாக விவசாயம் செய்து வந்துள்ளார். நிலத்தில் பங்கு கேட்டு பங்காருவின் பேரன்கள் மணிகண்டன் (வயது 31), விஜி (வயது 28) ஆகிய இருவரும் சீனிவாசனிடம் ஏற்கனவே அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். 

 

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சீனிவாசன் இருசக்கர வாகனத்தில் கடம்பூர் - பைத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த மணிகண்டன், விஜி ஆகிய இருவரும், கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே கொலையாளிகள் இருவரும் ஆத்தூர் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தனர். 

 

இருவரையும் இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர்களை, கொலை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர், அந்தக் கொலை எப்படி நடந்தது என்பதை நடித்துக் காண்பிக்கச் சொல்லி வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். காவல்துறையில் மணிகண்டன், விஜி ஆகிய இருவரும் அளித்துள்ள வாக்குமூலத்தில், சீனிவாசன் குடும்பத்திற்கும், எங்கள் பாட்டி பங்காரு குடும்பத்திற்கும் 5 ஏக்கர் நிலம் பொதுச்சொத்தாக உள்ளது. இந்த நிலத்தை சீனிவாசன் பங்கு பிரித்துக் கொடுக்காமல் அவரே அனுபவித்து வந்தார். 

 

எங்களுடைய அப்பா ரவிச்சந்திரன், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு அவரிடம் நிலத்தில் பங்கு கேட்டபோது, எங்கள் தந்தையை கடுமையாக தாக்கினார். தலையைப் பிடித்து சுவரில் மோதியதில் அவருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது. அதற்கு 3 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவானது. உங்களால்தானே எங்கள் தந்தைக்கு பார்வை பாதிக்கப்பட்டது. அதற்கான மருத்துவ செலவுக்காகவாவது பணத்தைக் கொடுக்கும்படி கேட்டோம். அதனால் அப்போது சீனிவாசன் 2 லட்சம் ரூபாய் கொடுத்தார். பின்னர், அந்தப் பணம்தான் எங்களுக்குத் தர வேண்டிய நிலத்திற்கான பாகத்திற்கானது என்று சொன்னார். 

 

இது எங்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மீண்டும் நிலத்தில் பங்கு கேட்டு வந்தால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டினார். எங்கள் தந்தையை தாக்கியதற்கு பழி தீர்க்கவும், அவரிடம் இருந்து எங்களை காப்பாற்றிக் கொள்ளவும் நாங்கள் முந்திக்கொண்டு சீனிவாசனை வெட்டிக் கொலை செய்தோம். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். 

 

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 2 கொடுவாள், சூரிக்கத்தி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களை மீண்டும் ஆத்தூர் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் கொலையாளிகள் இருவரும், ஆத்தூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

14 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
 Rain alert for 14 districts

தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத்  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மற்றும் கோவையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான அறிவிப்பின்படி கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கணவனின் திருமணத்தை மீறிய உறவைக் கண்டித்த மனைவி; அடுத்து நடந்த சோகம்!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
A wife who condemned her husband's adulterous relationship

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவர் எலெஜ்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மணிகண்டனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில், திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இந்த விவகாரம், மணிகண்டனின் குடும்பத்துக்கு தெரியவர, தனது பெண் தோழியோடு எடப்பாடி அருகே வளையசெட்டியூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இதனிடையே, தனது கணவர் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டனின் மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். 

பின்னர், மணிகண்டன் வளையசெட்டியூர் பகுதியில் இருப்பதை அறிந்த அவரது மனைவி அந்த இடத்துக்கு சென்று மணிகண்டனின் தகாத உறவைக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் தன்னோடு வரும்படி அழைத்துள்ளார். இதில் கோபமடைந்த மணிகண்டன் வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள மதுபானக் கடை அருகில் விஷம் குடித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள், மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் வைத்திருந்த தகாத உறவை மனைவி கண்டித்ததால், எலெக்ட்ரீசியன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.