![farmer incident in namakkal district police investigation underway](http://image.nakkheeran.in/cdn/farfuture/2vlOpAvpw9N7ddAmb_bXPz6mGUmSEinHuu4Im9aR5ko/1638759299/sites/default/files/inline-images/subsas.jpg)
ஆத்தூர் அருகே, வாரிசு இல்லாத சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில், விவசாயியை அடித்துக் கொலை செய்து, கரும்பு தோட்டத்தில் புதைத்த கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பு என்கிற சுப்ரமணி (வயது 74), விவசாயி. இவருக்குத் திருமணம் ஆகவில்லை. தனியாக ஒரு வீட்டில் வசித்துவந்தார்.
இவர் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி திடீரென்று மாயமானார். நாமகிரிப்பேட்டையில் உள்ள சுப்ரமணியின் உறவினர் கனகம் என்பவர், சுப்ரமணியை கண்டுபிடித்துத் தரக்கோரி, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூரில் சுப்ரமணிக்கு சொந்தமாக 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தை விற்பனை செய்வதில் ஆத்தூரைச் சேர்ந்த சாராய வியாபாரி பெருமாள் (வயது 55) என்பவருடன் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அவர்தான் கூட்டாளிகளுடன் சேர்ந்து சுப்ரமணியை அடித்துக் கொலை செய்திருக்க வேண்டும் என கனகம் புகாரில் கூறியிருந்தார்.
பின்னர் சம்பவ நடந்த இடம் ஆத்தூர் எல்லைக்குள் வருவதால், எஃப்.ஐ.ஆர். மட்டும் பதிவுசெய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் தொடர் விசாரணை ஆத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. விவசாயி சுப்ரமணி தன்னுடைய நிலத்தை சாராய வியாபாரி பெருமாள் என்பவருக்கு 1.26 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்திருந்தார். இருதரப்புக்கும் பேரம் படிந்ததை அடுத்து, அந்த நிலத்தைக் கிரயம் செய்வதற்கு முன்பணமாக பெருமாள் 10 லட்சம் ரூபாயைக் சுப்ரமணிக்கு கொடுத்திருக்கிறார்.
![farmer incident in namakkal district police investigation underway](http://image.nakkheeran.in/cdn/farfuture/7yEXB6_ZNkpNMm7Z4_AL9qkwKVwDvmZOxVl5hIm0pgY/1638759330/sites/default/files/inline-images/sub323222.jpg)
இந்நிலையில், சுப்ரமணி திருமணமாகாதவர் என்பதும், அவருக்கு நேரடி வாரிசுகள் என்று யாரும் இல்லை என்பதையும் அறிந்த பெருமாள் தரப்பு, அவரை கொலைசெய்துவிட்டு, நிலத்தை அபகரித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து பெருமாள், அவருடைய ஆதராளர்கள் ராமதாஸ் (வயது 27), அறிவழகன், விவசாயி சக்திவேல், முஸ்தபா, தினேஷ் மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய 7 பேரும் சுப்ரமணியை கொலைசெய்து, சிவகங்காபுரத்தைச் சேர்ந்த சக்திவேலுக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் புதைத்துவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஆத்தூர் காவல்துறையினர், ராமதாஸ், அறிவழகன் மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். ராமதாஸ், அறிவழகன் ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு, சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்குக் காவல்துறையினர் சென்றனர்.
அவர்கள் கூறிய இடங்களில் எல்லாம் ஜேசிபி இயந்திர உதவியுடன் தோண்டிப் பார்த்தும் சடலம் கிடைக்கவில்லை. 60 அடி நீளம், 6 அடி ஆழம் வரை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தோண்டிப் பார்த்தும் சடலம் புதைக்கப்பட்ட இடம் எதுவென்று சரியாகத் தெரியவில்லை. மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (05.12.2021) அன்றும் சடலத்தைத் தேடும் பணிகள் நடந்தன. இதுவரை சடலமோ, எலும்புகளோ கூட கிடைக்கவில்லை. பிடிபட்ட நபர்கள், சடலத்தைப் புதைத்த இடத்தைத் துல்லியமாகக் கூறாததால் காவல்துறையினரும் சலிப்படைந்தனர். இதையடுத்து கைதான மூவரையும் காவல்துறையினர் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெருமாள், சக்திவேல், நரசிங்கபுரம் தினேஷ், ஓலப்பாடியைச் சேர்ந்த முஸ்தபா ஆகியோரைத் தேடிவந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை (டிச. 4) மாலையில் ஆத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தினேஷும், ஓலப்பாடி முஸ்தபா ஆத்தூர் ஊரக காவல்நிலையத்திலும் சரணடைந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்ட ராமதாஸ், அறிவழகன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் இருவரையும் 2 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், தலைமறைவாக உள்ள பெருமாள், தோட்டத்து உரிமையாளர் சக்திவேல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.