மறைந்த எழுத்தாளர் இளவேனில் உடலுக்கு நக்கீரன் ஆசிரியர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த எழுத்தாளர் இளவேனில் மாரடைப்பு காரணமாக நேற்று (02/01/2021) காலமானார். அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டது. பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி வருகின்றனர். அஞ்சலிக்கு பிறகு இளவேனில் உடல் ஏ.வி.எம். மயானத்தில் இன்று (03/01/2021) நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இடதுசாரி சிந்தனையாளரான எழுத்தாளர் இளவேனில், 'வாளோடும் தேன் சிந்தும் மலர்களோடும்', புரட்சியும், எதிர்ப்பு புரட்சியும்' உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட நூல்களையும், கவிதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞரின் கதை, வசனத்தில் உருவான உளியின் ஓசை திரைப்படத்தில், இளவேனில் இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் இளவேனில் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, நக்கீரன் ஆசிரியர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள எழுத்தாளர் இளவேனில் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் பேட்டியளித்த நக்கீரன் ஆசிரியர், "இளவேனில் ஒரு போராளி. எங்கள மாதிரி சக கலைஞரா ஓவியர் வேற. கொஞ்சம் பிடிவாதக்காரர், கலைஞருடன் அவ்வளவு நட்பாக இருந்தும், கலைஞரை பயன்படுத்தாதவர். உளியின் ஓசையை அவர் டைரக்ட் பன்றாரு. கலைஞரை பயன்படுத்தி உளியின் ஓசையின் புரொடியூசர் இன்று பெரும்பணக்காரராகியுள்ளார். அப்ப டைரக்கடராக இருந்தவர் கலைஞர் கிட்ட எந்த உதவியையும் கேட்காமல் இன்று வரை நட்பு பாராட்டியிருந்த ஒருத்தரை நீங்கள் எங்கியாவது பார்த்திருக்க முடியாது. அவர் இளவேனில் மட்டுமே. 1990- களில் கலைஞர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'அங்குசம்'னு ஒரு பத்திரிகை நல்ல பத்திரிகை நீங்க பப்ளிஷ் பண்ணுங்க, அதுக்கு இளவேனில் ஆசிரியராக இருக்கட்டும் என்று என்கிட்ட சொன்னார்.
கலைஞர் ரெகமண்ட் பண்ணி இளவேனில் ட அனுப்பனாரு,அப்ப இளவேனில் 'அங்குசம்' எப்படி பண்ண போறனா, நக்கீரன் மாதிரியே இருக்கும்னாரு, நக்கீரன் மாதிரியே 'அங்குசம்' கொண்டு வருவதற்கு என்னையே கூப்பிட்டு பப்ளிஷ் பண்ண சொன்னவரு. அப்ப பாத்துக்கோங்க எவ்வளவு தைரியம் இருக்கும்னு. நினைச்சத நினைச்ச இடத்துல பட்டுனு பேசற ஒரு மனிதர்.கடைசி வரைக்கும் யாருக்கும் தலைவணங்காமல், அவர் நம்மை விட்டு போனது சாதாரண இழப்பல்ல, ஒரு பேரிழப்பு. தி.மு.க. உறுப்பினருன்னு சொல்லுவாரு. ஆனா தி.மு.க.ல இருக்கிற கம்யூனிஸ்ட் ஆக நாங்க பாத்தோம். அவரின் இழப்பு பேரிழப்பு" என்றார்.