![famous jewelry store is under siege for fraud of more than rs 100 crores](http://image.nakkheeran.in/cdn/farfuture/oDota7Gp76t6BhFlugS9y_WDCDTsIQQxGPYTGe8SjM8/1697610854/sites/default/files/inline-images/993_144.jpg)
திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோயில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரபல ஜுவல்லரி கடை செயல்பட்டு வந்தது. செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என நிர்வாகம் கொடுத்த விளம்பரத்தை பார்த்த பலரும் முதலில் லட்சங்களில் முதலீடு செய்தனர். 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் என மாதம் தோறும் 10000 ரூபாய், பத்து மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சி அறிவிப்பை நம்பி பலரும் 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் கடந்த இரண்டு மாதமாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்தது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஓரிரு வாரங்களில் பணம் செட்டில் செய்வதாக ஜூவல்லரி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனிடையே திருச்சி கடை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் திருச்சி, கரூர் பைபாஸ் சாலையில் செயல்படும் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தியதுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ள நிலையில் சுமார் 100 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாக வாடிக்கையாளர்கள் குமுறுகின்றனர்.