
ராமநாதபுரம் மாவட்டம் வேதாளம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பிறந்து மூன்று நாட்களான குழந்தையுடன் கணவன், மனைவி, ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன அடைக்கான். 28 வயதான இவர் டீக்கடை மாஸ்டராக பணிபுரிகிறார். சின்ன அடைக்கானுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் சிவங்கிவலைக்குப்பத்தை சேர்ந்த சுமதி என்ற பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிப்ரவரி 17ம் தேதி சுமதிக்கு தலைப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அவர்களது உறவினரின் திருமணம் அடுத்த வாரம் நடக்க இருந்த நிலையில், நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.
ஆட்டோவில் செல்ல முடிவு செய்து சுமதி, பிறந்த குழந்தை, சின்ன அடைக்கான், தாய் காளியம்மாள் ஆகியோர் ஆட்டோவில் சிவங்கிவலைக்குப்பத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நதிப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் தடம் மாறி இடதுபுறம் சென்ற ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மலைராஜ் உட்பட ஐந்து பேரும் காயமடைந்தனர். அவர்களை மீட்ட காவல்துறையினர் மீண்டும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் பிறந்த மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, தாய் சுமதி, சுமதியின் கணவன் சின்ன அடைக்கான், மலைராஜ் ஆகியோர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.