தமிழ்நாட்டின் 70% அரசுப் பள்ளிகளில் கழிவறை இல்லை என்ற செய்தி குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 6 ஆம் தேதி திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதனையடுத்து தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜுன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஜுன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து பள்ளிகள் ஜூன் 10 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இத்தகைய சூழலில்தான் தனியார் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், “தமிழ்நாட்டில் உள்ள 70% அரசுப் பள்ளிகளில் கழிவறைகளே இல்லை” என்று தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இது முற்றிலும் பொய்யான செய்தி. மத்திய அரசின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UDISE 2021-22) வெளியிட்ட தரவின்படி, தமிழ்நாட்டில் 99.9% அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதி உள்ளன. 'தமிழ்நாட்டில் 70% அரசுப் பள்ளிகளில் கழிவறை இல்லை எனும் தகவல் பொய்யானது' என்று பள்ளிக்கல்வித்துறையும் மறுத்துள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.