முகநூல் மூலம் இன்றைக்கு அறிமுகம் இல்லாதவா்கள் அறிமுகமாகி இணை பிரியாத நண்பர்களாகி ஒருவருக்கு ஒருவர் அனைத்து நல்லது கெட்டது நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகின்றனர். அந்தவகையில்தான் குமரி மாவட்டம் இணையம்புத்தன் துறை மீனவ கிராமத்தை சேர்ந்த வினோபின்ராஜ்க்கு முகநூல் மூலம் திருப்பூா் மாவட்டம் ஆத்து கிணத்துபட்டியை சேர்ந்த சங்கீதா (23), ஈரோட்டை சோ்ந்த சாஜித் (30), சேலம் காசிமுனியப்பன் தெருவை சோ்ந்த மோகன் (33), அருப்புக் கோட்டையை சேர்ந்த ஷியாமளா (29), நெல்லையை சோ்ந்த பாலசுப்ரமணியன் (27), ஆகியோர் முகநூல் மூலம் அறிமுகமாகி. நண்பா்களாக பழகி வந்தனர்.
இந்தநிலையில் வினோபின்ராஜின் திருமணம் விழா இணையம்புத்தன் துறை கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்தது. இதில் முகநூல் நண்பர்களான சங்கிதா, மோகன், சாஜித், ஷியாமிளா, பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் இணையம்புத்தன் துறை கடற்கரைக்கு சென்று கடலில் கால் நனைத்தபடி கடல் அழகை ரசித்து கொணடு இருந்தனர். அந்த நேரத்தில் திடீரென்று வேகமாக உயர்ந்து எழுந்த அலை சங்கீதாவையும் மோகனையும் கடலுக்குள் இழுத்து சென்றது. அப்போது இருவரையும் மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.
உடனே அந்த நண்பர்கள் சத்தம் போடவே அங்கு நின்ற மீனவர்கள் கடலுக்குள் குதித்து சங்கீதாவையும் மோகனையும் மீட்க தேடினார்கள். இதில் மீட்கப்பட்ட சங்கீதாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் கூறினார். ஆனால் மோகனை, அலை தூரத்துக்கு இழுத்து சென்றதால் அவரை மீட்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று காலை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் அங்கு மிதந்து கிடந்த உடலை கண்டு கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கடலுக்குள் சென்று அந்த உடலை மீட்டு வந்து பார்த்ததில் அது மோகனின் உடல் என தெரியவந்தது.
இச்சம்பவத்தை கேள்விபட்டு சங்கீதா மற்றும் மோகனின் உறவினர்கள் இணையம்புத்தன் துறைக்கு வந்து கண்ணீா் விட்டு கதறினார்கள். இது அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.