கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22, 23 தேதிகளில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி கடற்கரை சாலையிலுள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்திவருகிறார்.
இந்த ஆணையத்தின் சார்பில் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இவ்வாணையத்தின் காலம் வரும் 22ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு ஆணையத்தின் விசாரணைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதிவரை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், கடந்த மே 14ஆம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த இடைக்கால விசாரணை அறிக்கையை இந்த ஆணையம் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது. தற்போது 6 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவே கடைசி அவகாசம். இந்த அவகாசம் முடிவதற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணையத்திற்கு அரசு சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.