Skip to main content

இருபதாவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு; பிப்.19ல் தீர்ப்பா?

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Extension of judicial custody for the twentieth time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

அதே சமயம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். தொடர்ந்து விசாரணைகள் நடந்துவரும் நிலையில், அண்மையில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார். இது தொடர்பான மனு நேற்று (14-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ‘அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகிவிட்டதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அமைச்சராக இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற அமலாக்கத்துறையின் வாதம் தற்போது செல்லாததாகிவிட்டது. வழக்கு தொடர்பான புலனாய்வும் நிறைவு, அனைத்து ஆதாரங்களை தாக்கல் செய்துவிட்டதாக அமலாக்கத்துறை கூறிவிட்டது. வழக்கில் தொடர்புடைய யாரும் யாருடைய வீட்டுக்கும் நேரில் சென்று மிரட்டல் விடுப்பதில்லை. மறைமுகமாக ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இருந்தால் சிறையில் இருந்தும் கூட ஒருவரால் அச்சுறுத்த முடியும். அமலாக்கத்துறை முன்வைத்த அனைத்து வாதங்களும் செல்லாதவை ஆகிவிட்டன.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தவறுதலாக ஆதாரத்தைப் பதிவு செய்துவிட்டதாக வழக்கு விசாரணையின் போது அது பற்றி விளக்கக் கோருகிறது அமலாக்கத்துறை. தற்போதைய நிலையில், திருத்தப்படாத ஆதாரங்களைக் கொண்டு தங்கள் தரப்பை வாதிட அமலாக்கப் பிரிவுக்கு வழி இல்லை. தற்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஆதாரங்களைக் கொண்டு விசாரணை நடத்தினால், செந்தில் பாலாஜியை விடுவித்தாக வேண்டும். அதனால், 270 நாட்களாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

செந்தில் பாலாஜி தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் இன்று நடைபெற்றது. அதில், செந்தில் பாலாஜி தரப்பு சொல்வதைப்போல் எந்த ஆவணங்களையும் திருத்தம் செய்யவில்லை. அனைத்து ஆவணங்களையும் சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுத்தான் செய்தோம். சாட்சி விசாரணையை தொடங்க உள்ளோம் என்ற வாதங்களை அமலாக்கத்துறை வைத்தது.

தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணையை ஒத்திவைக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் குற்றச்சாட்டு பதிவுக்காக நாளை செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நாளை வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இதுவரை இருபதாவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான அமலாக்கத்துறையின் வாதம் இன்று முடிந்த நிலையில், வழக்கு பிப். 19 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்.19 ஆம் தேதி இந்த வழக்கில் ஒருவேளை தீர்ப்பளிக்கப்படலாம்  எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சார்ந்த செய்திகள்