
காவிரில் இருந்து புரண்டு ஓடும் தண்ணீர் வீணாகி கடலில் கலப்பதைவிட அதனை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று தண்ணீர் போக்கு இல்லாத தஞ்சையின் தெற்கு பக்கம் தண்ணீரை திருப்பி புதிய ஆறு வெட்டி பல இடங்களில் பள்ளங்களை நிரப்பி புதுக்கோட்டை மாவட்டம் மும்பாலை ஏரி வரை தண்ணீரை கொண்டு சென்று கடைமடையையும் முப்போகம் விளைய வைத்தது கல்லணை கால்வாய்.
கால்வாயின் குறுக்கே செல்லும் காட்டாறுகளை தடை செய்யாமல் அதன் மேலே தொட்டிப் பாலம் அமைத்து தண்ணீரை கடத்திச் செல்லப்பட்டது. தண்ணீர் செல்லும் காலங்களில் ஆற்றுக்கரையில் செல்ல சாலை மறுகரைகளை கடக்க பாலங்களில் இணைப்பு பாதைகள் என ஆங்கிலேயர்கள் அமைத்திருந்தனர். இந்த கல்லணை கால்வாயில் தண்ணீர் வீணாவதை தடுக்கும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக தரை தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் பலமாக இருந்த பழமையான பாலங்களும் உடைக்கப்பட்டு புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில், ‘நாங்கள் தண்ணீரில் குதித்து நீந்தி விளையாடிய ஒரு பாலம் உடைக்கும் வெடிச்சத்தம் நெஞ்சைப் பிளக்கிறது, நித்திரையை கெடுக்கிறது’ என்கின்றனர் இளைஞர்கள்.
புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லையில் ஏனாதிக்கரம்பை, பைங்கால், செரியலூர் இணையும் இடத்தில் அம்புலி ஆற்றுக்கு மேலே 1948 ம் ஆண்டு கட்டப்பட்ட 12 கண் பாலம் உடைக்கும் சத்தம் தான் இளைஞர்களின் நித்திரையை கெடுத்தது. இது குறித்து செரியலூர் இளைஞர்கள் கூறும் போது, ‘ஆற்றில் தண்ணீர் வரும் போது இந்த பாலத்தில் குதித்து நீந்தி விளையாடிருக்கிறோம். இந்த வருடம் கூட விளையாடினோம். ரொம்ப உறுதியாக இருந்த இந்த பாலத்தில் தான் பக்கத்து ஊர்களுக்கு செல்லும் வழியாகவும் இருந்தது.

இதே போல கடும் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் உணவுக்கே தட்டுப்பாடு ஏற்பட்ட நேரங்களில் தஞ்சை மாவட்டத்தில் விளையும் நெல்லை விவசாயிகளிடம் வாங்கி போலீசாருக்கு தெரியாமல் இரவு நேரங்களில் தலைச்சுமையாக இந்த வழியாகத் தான் கொண்டு வந்ததாக எங்க பெற்றோர்கள் சொல்வாங்க. இப்ப இந்த பாலம் உடைக்கும் போது எங்க மனசே நொருங்குது. அவ்வளவு உறுதியான பாலத்தை வெடி வச்சு உடைக்கும் போது அந்த வெடிச்சத்தம் எங்க நெஞ்சை உடைக்கிறமாதிரி இருந்தது. இரவில் அந்த வெடிச்சத்ததால் உறக்கம் தொலைத்துவிட்டது. இந்த பாலத்தில் உள்ள ஒவ்வொரு செங்களும், கம்பியும் சிறிய பழுது இல்லாமல் உள்ளது. இதே இடத்தில் புதிய பாலம் கட்டப் போறாங்க. இந்த புதிய பாலம் அதே பலத்தோட இருக்கனும்’ என்கின்றனர்.