விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்-கிருஷ்ணகிரி சாலையில் உள்ளது செஞ்சி நகரம். இந்த நகரை ஒட்டியுள்ள ஞானோதயம் கிராமத்தில் போலீஸாரின் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச்சாவடியில் வளத்தி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு லாரி ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தி சந்தேகத்தின் பெயரில் லாரியை சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த லாரியில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 573 கேன்களில் சுமார் 20,000 லிட்டர் எரிசாராயம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் லாரி டிரைவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்களது விசாரணையில், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் இக்கிரம்(50), மராட்டிய மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு லாரியில் எரிசாராயம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அப்படிக் கடத்திவரப்பட்ட அந்த எரி சாராயத்தின் மொத்த மதிப்பு சுமார் 75 லட்ச ரூபாய் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து டிரைவர் இக்கிரமை கைது செய்ததோடு எரிசாராயம் வந்த லாரியையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். சுமார் 75 லட்சம் மதிப்புள்ள எரிசாராய கடத்தல் நடைபெற்ற சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .