Skip to main content

ஆபத்தான அளவில் செயற்கை நிறமூட்டிகள்; திடீர் ரெய்டால் கலக்கத்தில் அப்பள கம்பெனிகள்

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

Excessive synthetic pigments; Sudden raid on food companie

 

சேலத்தில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் செயற்கை நிறமூட்டிகளை கலந்து குழல் அப்பளங்களை தயாரித்து வந்த நிறுவனங்களில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

குழல் அப்பளம் என்றாலே, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்றான முக்கிய உணவுப்பொருளாகும். மஞ்சள், சிவப்பு என பார்த்தவுடனே கண்களைக் கவரும் வகையில் பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த மலிவு விலை கொரிக்கும் பண்டம், பெரு நிறுவனங்களின் காற்றடைத்த பைகளில் சொற்ப எண்ணிக்கையில் விற்கப்படும் பண்டங்களைக் காட்டிலும், கூடுதல் எடையிலும் கிடைக்கின்றன. இதனால் டைம்பாஸ் உணவாகவும், கீழ் நடுத்தர வர்க்க குடும்பங்களில் மதிய உணவுக்கு சைடு டிஷ் ஆகவும் இருந்து வருகிறது. 

 

இந்நிலையில், குழல் அப்பளங்களில் செயற்கை நிறமூட்டிகளை எந்தளவுக்கு சேர்க்கலாம் என்பதற்கு அரசு ஒரு வரையறையை வைத்துள்ளது. ஆனால் சிறுவர்களைக் கவர்வதற்காகவே பளிச்சிடும் வகையில் செயற்கை நிறமூட்டிகளை சில, பல குழல் அப்பள கம்பெனிகள் கூடுதலாக சேர்த்து விடுகின்றன. இதனால் சிறுவர்கள், முதியோர்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. 

 

Excessive synthetic pigments; Sudden raid on food companie

 

இந்நிலையில்தான் சேலத்தில், குழல் அப்பளங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அண்மையில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் சுமார் 38க்கும் மேற்பட்ட குழல் அப்பள தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கடந்த ஜன. 19ம் தேதி சேலம் மாவட்ட குழல் அப்பள தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் நடந்தது. 

 

இக்கூட்டத்தில், அரசால் அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமூட்டிகள் மற்றும் அதன் அளவு விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிப். 2ம் தேதி, மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவுப்பாதுகாப்பு அலுவலர் சிவலிங்கம் உள்ளிட்ட அலுவலர்கள், சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள பராசக்தி பிளவர் மற்றும் ஆயில் மில், ராஜ்குமார் குழல் அப்பளம், வைஸ்யா குகா புராடக்ட்ஸ், ஆசிர்வாதம் டிரேடிங் கம்பெனி, அன்னை டிரேடிங் கம்பெனி, பீட்டர் கம்பெனி, சீனிவாசன் புட் புராடக்ட்ஸ் ஆகிய 7 நிறுவனங்களில் திடீர் ஆய்வு செய்தனர். 

 

இந்த ஆய்வில், ஏற்கனவே விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்ட அளவை விட அதிகமான செயற்கை நிறமூட்டிகளை 3 நிறுவனங்கள் பயன்படுத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த மூன்று நிறுவனங்களில் இருந்து 2.10 டன் குழல் அப்பள உற்பத்திப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்து உணவு மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு, உணவுப் பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

 

பகுப்பாய்வுக் கூடத்தில் இருந்து அறிக்கை கிடைத்தபிறகு, அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

குழல் அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்களில் இதுபோன்ற சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் கூறினர். மேலும், உணவுப்பாதுகாப்புத் தர நிர்ணயச் சட்டம் 2006 மற்றும் 2011 விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை தொடரும் என்றும் எச்சரித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்; முக்கிய தகவலை வெளியிட்ட என்.ஐ.ஏ.!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
new information released about bengaluru hotel incident by nia

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

new information released about bengaluru hotel incident by nia

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்திய நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகி இருந்தன. மேலும் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் உணவகத்தில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) நேற்று (27.03.2024) மூன்று மாநிலங்களில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் 12, தமிழ்நாட்டில் 5 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ஒன்று உட்பட மொத்தம் 18 இடங்களில் என்.ஐ.ஏ. குழுக்கள் சோதனை செய்த பின்னர் முஸம்மில் ஷரீப் கைது செய்யப்பட்டு துணை குற்றவாளியாக காவலில் வைக்கப்பட்டார்.

new information released about bengaluru hotel incident by nia

கடந்த மார்ச் 3 ஆம் தேதி இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. முக்கிய குற்றவாளியான முசாவிர் முன்னதாகவே என்.ஐ.ஏ.வால் அடையாளம் காட்டப்பட்டார். குண்டுவெடிப்பை நடத்தியவர் ஷசீப் உசேன். மற்றொரு சதிகாரரான அப்துல் என்பவரையும் என்.ஐ.ஏ. அடையாளம் கண்டுள்ளது. மற்ற வழக்குகளில் என்.ஐ.ஏ. ஏஜென்சியால் தேடப்பட்டவர் மதின் தாஹா. இவர்கள் இரண்டு பேரும் தலைமறைவாக இருக்கிறார்கள். மார்ச் 1 ஆம் தேதி பெங்களூரு புரூக்ஃபீல்டில் உள்ள ஐடிபிஎல் சாலையில் உள்ள கபேயில் ஐ.இ.டி. வெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவருக்கு முஸம்மில் ஷரீப் தளவாட ஆதரவை வழங்கியதாக என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் பல வாடிக்கையாளர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் காயமடைந்தனர். அவர்களில் சிலர் கடுமையாக, வெடிவிபத்தில் சிக்கினர். மேலும் ஹோட்டல் சொத்துக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

new information released about bengaluru hotel incident by nia

இந்த மூன்று குற்றவாளிகளின் வீடுகளிலும், மற்ற சந்தேக நபர்களின் வீடுகளிலும், கடைகளிலும் இன்று (28.03.2024) சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது பணம் மற்றும் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்கவும், குண்டுவெடிப்புக்குப் பின் உள்ள பெரிய சதியைக் கண்டறியவும் முயற்சிகள் நடந்து வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.