திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரசுப் பள்ளி முன்னாள் மாணவிகள் தங்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட வேண்டும் என பள்ளியின் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017-18 ஆம் ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு படித்த மாணவிகளுக்குத் தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் நிலையில் படிப்பு முடிந்து நான்காண்டுகளாகிய பின்னரும் தங்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டிய மாணவிகள், மடிக்கணினி வழங்கப்பட்டுவிட்டதாகக் கையெழுத்து மட்டும் வாங்கி உள்ளனர் எனத் தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் மாணவியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.