பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை வழக்கில் மறுவிசாரணையை தொடங்கியுள்ள சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், முன்னாள் துணைவேந்தர், அங்கமுத்துவின் உறவினர்கள் உள்பட 15 பேருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் அங்கமுத்து. சேலம் பெரியார் பல்கலையில் 2012&2015 காலக்கட்டத்தில் பதிவாளராக பணியாற்றி வந்தார். அவர், 18.12.2017ம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பல்கலையில் செல்வாக்கு மிக்க பதவியில் இருந்த அங்கமுத்து, பதிவாளர் பதவிக்காலம் முடிந்த பிறகு தனது முந்தைய பணியான உடற்கல்வி இயக்குநர் பணிக்குச் சென்றுவிட்டார்.
இப்படிப்பட்டச் சூழலில்தான் அவருடைய திடீர் தற்கொலை முடிவு, பல்கலை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த சில நாள்கள் கழித்து அவருடைய வீட்டில் இருந்து அங்கமுத்து எழுதி வைத்திருந்த தற்கொலை குறிப்பு கடிதத்தை பெருந்துறை போலீசார் கைப்பற்றினர்.
ஏழு பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில், 2014 & 2017 வரை பெரியார் பல்கலையில் துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் பணியிடங்களை 25 லட்சம் ரூபாய் முதல் 45 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு நியமித்ததாகக் குறிப்பிட்டு இருந்தார்.
சுவாமிநாதனுக்கு தான் மட்டுமே அவ்வாறு 10 கோடி ரூபாய் வரை வசூலித்துக் கொடுத்ததாகவும், அதன்பிறகு பல்கலையில் நடந்த பல்வேறு ஊழல்களில் தன்னை மட்டுமே சுவாமிநாதன் சிக்க வைக்க முயன்றதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
தனது தற்கொலைக்கு சுவாமிநாதன், இயற்பியல் துறை பேராசிரியர் 'மூளை' கிருஷ்ணகுமார், அப்போதைய பதிவாளர் மணிவண்ணன், அலுவலக ஊழியர்கள் நெல்சன், குழந்தைவேல், ராஜமாணிக்கம், ஸ்ரீதர் ஆகிய ஏழு பேரும்தான் முக்கிய காரணம் என்று தெளிவாக எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில் இருந்த கையெழுத்து, அங்கமுத்துவினுடையதுதான் என்று சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகமும் உறுதிப்படுத்தியது. இதற்கிடையே, பெரியார் பல்கலையில் இருந்த முக்கிய கோப்புகளை அங்கமுத்து ஒப்படைக்காமல் சென்றுவிட்டதாக கடந்த ஆண்டு சூரமங்கலம் போலீசில் பதிவாளர் மணிவண்ணன் ஒரு புகார் அளித்து இருந்தார்.
அங்கமுத்து மீது ஏற்கனவே ஒரு வழக்கு சேலம் மாநகர காவல்துறையில் உள்ள நிலையில், அவருடைய தற்கொலை வழக்கையும் சேலம் மாநகர காவல்துறைக்கு மாற்றும்படி ஏடிஜிபிக்கு பரிந்துரை செய்தது பெருந்துறை போலீஸ். அதன்பிறகு, இந்த வழக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவின் ஓர் அங்கமான கொடுங்குற்றப்பிரிவு வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து அங்கமுத்துவை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் தற்கொலை குறிப்பு கடிதத்தில் குறிப்பிட்டிருந்த மேற்சொன்ன ஏழு பேர் மீதும் புதிதாக கொடுங்குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ் வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அங்கமுத்துவின் மனைவி விஜயலட்சுமி உள்பட அவர் தரப்பில் 8 பேர் மீதும், பெரியார் பல்கலை முன்னாள் துணை வேந்தர் சுவாமிநாதன், பேராசிரியர் 'மூளை' கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 7 பேர் மீதும் என மொத்தம் 15 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
முதல்கட்டமாக கடந்த 3.12.2018ம் தேதியன்று பெரியார் பல்கலை அலுவலக ஊழியர் நெல்சன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர். ராஜமாணிக்கத்தை விசாரணைக்கு அழைத்தபோது அவர் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மற்ற ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கில் தீவிரம் காட்டி வருவதால் முன்னாள் துணை வேந்தர் சுவாமிநாதன் உள்ளிட்ட வட்டாரங்கள் பீதி அடைந்துள்ளனர்.