Skip to main content

கோடிகளை குவித்த சேலம் மாநகராட்சி மாஜி பொறியாளர்; ஓய்வுக்கு முதல் நாளில் அதிரடி பணியிடை நீக்கம்!  

 

Ex-engineer Salem Corporation suspended for adding crore assets excess income

 

வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துகளை வாரிச் சுருட்டிய புகாரின் பேரில், சேலம் மாநகராட்சி முன்னாள் பொறியாளர் அசோகன், ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.     

 

சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்தவர் அசோகன் (60). இவர், சேலம் மாநகராட்சியில் கடந்த 2021ம் ஆண்டு மாநகர பொறியாளராகப்  பணியாற்றி வந்தார். திடீரென்று அவர் மீது ஊழல் புகார் கிளம்பியது. இதையடுத்து, அவரை உடனடியாக பணியில் இருந்து விடுவித்த அப்போதைய நகராட்சி நிர்வாக ஆணையர் ஷிவ்தாஸ் மீனா, ஆறு மாத காலமாக வேறு இடத்தில் பணியில் சேர விடாமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்தார்.     

 

இந்த நிலையில் அசோகன், அவருடைய மனைவியும் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான பரிவாதினி, தாயார் பாக்கியம் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்தகாக, சேலம் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு  செய்தனர்.     அதாவது, கடந்த 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை செக் பீரியடு ஆக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தக் காலகட்டத்தில்  அசோகன் மற்றும் குடும்பத்தாரின் வருமானம் 3.30 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதில் மாதச் சம்பளம், சொத்துகள் விற்பனை, வாடகை  வருமானம் மற்றும் இதர இனங்கள் மூலமாக 1.22 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.  

 

இதே காலகட்டத்தில் உணவு, வீட்டு பராமரிப்பு, மருத்துவம் மற்றும் கல்விச் செலவு, இதர இனங்கள் மூலமாக 27.80 லட்சம் ரூபாய் செலவுகள் ஆகியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அசோகன் மற்றும் அவருடைய குடும்பத்தார் வருமானத்துக்கு அதிகமாக 2.20 கோடி ரூபாய்  சேர்த்துள்ளது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதற்கிடையே, கடந்த 2022ம் ஆண்டு, சேலம் நகர கூட்டுறவு வங்கியில் அசோகனுக்குச் சொந்தமான லாக்கரை திறந்தும் சோதனை  நடத்தப்பட்டது. அதில் 45 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 130 பவுன் நகைகள் இருப்பது தெரிய வந்தது. இது தவிர அசோகன் அவருடைய உறவினர்கள், பினாமிகள் பெயரில் நீச்சல் பயிற்சி மையம், உடற்பயிற்சிக்கூடம், 100க்கும் மேற்பட்ட வீடுகள்,  ஏற்காட்டில் நிலங்களை வாங்கிப் போட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.    

 

இந்நிலையில், ஆறு மாத காத்திருப்புக்குப் பிறகு நெல்லை மாநகராட்சியில் மாநகர பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு இறுதியில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.  பொறியாளர் அசோகன், 2023ம் ஆண்டு ஜன. 31ம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில், அவர் மீதான வழக்கு விசாரணை முடிவடையாமல் இருந்ததால் அவரை பணியில் இருந்து ஓய்வுபெற அனுமதிக்கக் கூடாது என்றும், துறை ரீதியாக என்.ஓ.சி. சான்றிதழ் வழங்கக்கூடாது என்றும் ஊழல் தடுப்புப்பிரிவு தரப்பில் அரசிடம் முறையிடப்பட்டது.  

 

இதையடுத்து அசோகனை கடந்த ஜன. 30ம் தேதி அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, பணி  ஓய்வுபெற ஒரு நாள் இருந்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சேலம் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''பொறியாளர் அசோகன் மீதான வழக்கு  விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அவருடைய சொத்துகளை மதிப்பீடு செய்யும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.  விரைவில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அவர் மீதான வழக்கு விசாரணை முடிவடையாததால் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்'' என்றனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !