காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கடந்த மாதம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதே சமயம் அவரது உடல்நிலையைச் சீராக்க மருத்துவர்கள் முயற்சித்து வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று (14.12.2024) காலை 10:12 மணியளவில் காலமானார். இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த மாதம் 13ஆம் தேதி (13.11.2024) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14.12.2024) காலமானார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தமிழக காங்கிரஸ் தலைமையகமான சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நாளை(15.12.2024) ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் காங்கிரஸ் தொண்டர்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் நாளை மாலை சென்னையில் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் எனும் தகவல் வெளியாகி உள்ளது. தந்தை பெரியாரின் சகோதரர் ஈ.வெ. கிருஷ்ணசாமியின் பேரன்தான், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆவார். இவர் சென்னை மாநில கல்லூரியில் படித்தபோது காங்கிரஸ் கட்சியின் மாணவரணிச் செயலாளராக இருந்தவர் ஆவார்.
கடந்த 1984ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அதன் பின்னர் கடந்த 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே சமயம் 2004 முதல் 2009 வரை மத்திய அமைச்சரவையில் இணையமைச்சராகப் பதவி வகித்து வந்தார். மேலும் 2000 - 2002, 2014 - 2016 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருமுறை பதவி வகித்தார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வெ.ரா. மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 2023ஆம் ஆண்டு மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார். இத்தகைய சூழலில் தான் உடல்நலக் குறைவால் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (14.12.2024) சிகிச்சை பலனின்றி காலமானார்.