Skip to main content

எத்தனால் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து; செல்போன் பயன்படுத்த தடை!

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

Ethanol lorry overturned accident; Prohibition of cell phone use!

 

நாமக்கல் மாவட்டம் பச்சாம்பாளையம் அருகே எத்தனால் ஏற்றிக் கொண்டு வந்த டேங்க் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

கர்நாடகாவில் இருந்து எளிதில் தீப்பற்றக் கூடிய சுமார் 40,000 லிட்டர் அளவிலான எத்தனால் எரிபொருள் லாரி மூலம் கோவை மாவட்டம் திருப்பூர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் டேங்கர் லாரியானது சாலையோரம் கவிழ்ந்து விழுந்தது.  உடனடியாக சங்ககிரியை சேர்ந்த தீயணைப்புத் துறையினர் தீ பிடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடியாக கவிழ்ந்துள்ள லாரி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அந்த பகுதியில் மக்கள் யாரும் செல்போனை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

 

பெட்ரோல் மூலப்பொருளான எத்தனால் காற்றில் பரவுவதால் அந்த பகுதியில் அச்சம் நிலவி வருகிறது. கோவையிலிருந்து இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் வந்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய தீப்பொறி ஏற்பட்டாலும் பெரிய அளவில் விபத்து நேரிடும் என்பதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆடிட்டர் வீட்டில் 235 பவுன் நகை திருட்டு; போலீசார் விசாரணை

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
jewelery theft from auditor's home; Police investigation

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 235 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு சூரம்பட்டி என். ஜி. ஜி. ஓ காலனி 7-வது வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (69). ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 8-ந் தேதி காலை மனைவி சாதனாவுடன் தேனிக்கு சென்றார். மறுநாள் காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 235 பவுன் நகைகள், ரூ.48 லட்சம் ரொக்க பணத்தையும் திருடிச் சென்றார்.

சுப்பிரமணியின் புகாரைத் தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர். சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கொள்ளையனை தேடி கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு சென்ற கிரைம் போலீசார் 9 பேர் முகாமிட்டு கொள்ளையனை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆடிட்டருக்கு நெருக்கமானவர்கள் மூலம் தகவல் கசிந்து மர்ம நபர் கைவரிசை காட்டியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீசார் கூறியதாவது, 'வீட்டை பூட்டிவிட்டு ஆடிட்டர் குடும்பத்துடன் வெளியூர் செல்வதை முன்கூட்டியே அறிந்து மர்ம நபர் காரில் வந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். மொபைல் போன் டவர் அடிப்படையாகக் கொண்டு மர்ம நபரை கண்டறிய தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம். பெங்களூரைச் சேர்ந்த பழைய குற்றவாளிகள் கைரேகைகளுடன் மர்ம நபரின் கைரேகை ஒப்பிடப்பட்டு வருகிறது. 400 -க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறோம்' என தெரிவித்துள்ளனர்.

Next Story

பகலில் அர்ச்சகர், இரவில் திருடன்; கோவில் நகை முதல் இருசக்கர வாகனம் வரை  திருட்டு!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
priest stole everything from temple jewels to two-wheelers

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகர பகுதியில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சங்கராபுரம் காவல் நிலைய போலீசார் சங்கராபுரம் நகரப்பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி இருசக்கர வாகன கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

அந்த வகையில் சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொளத்தூர் சங்கராபுரம் - திருக்கோவிலூர் சாலையில் சங்கராபுரம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கணியாமூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து ராஜேஷ் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் ராஜேஷ் கனியாமூர் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருவதும் வயிற்று பிழைப்பிற்காக சங்கராபுரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பாசார் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவன் கழுத்தில் இருந்த ஒன்றரைப் பவுன் தாலியை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகரான ராஜேஷ் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 4 லட்சம் மதிப்பிலான ஆறு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராஜேஷ் சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவம் தொடர்பாக பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் போலீசாரின் தீவிர வாகனத்தை அணியின் காரணமாகவும் இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.