
ஈரோடு பத்ரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த வசந்தா (வயது 60) என்பவர் தனது கணவர் பழனிச்சாமியுடன் வசித்து வருகிறார். வசந்தா வீட்டு வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வசந்தா வழக்கம் போல் தூங்கச் சென்றார். அப்போது காற்றுக்காகத் கதவைத் தாழ் போடாமல் திறந்து வைத்து விட்டுத் தூங்கி உள்ளார்.
அப்போது நள்ளிரவில் வசந்தா வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் மூதாட்டி வசந்தாவை திடீரென தாக்கத் தொடங்கினார். அவரது முகத்தில் பலமாகத் தாக்கினார். பின்னர் மூதாட்டி காதில் அணிந்திருந்த 7 கிராம் தங்கத்தோடுகளைக் காதில் இருந்து பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்தில் மூதாட்டி காயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.