
தடையை மீறுவோம் என்று இந்து அமைப்புகள் தமிழக அரசுக்கு சவால் விட்டுள்ள நிலையில், ஈரோட்டில் அதன் தொடக்கம் நிகழ்ந்துள்ளது.
தமிழகம் முழுக்க இவ்வருடம் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்தத் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில், மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் 108 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி சலங்கபாளையம் என்ற ஊர் அருகே மின்ன வேட்டுவம்பாளையம் என்கிற கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் முன்பு பொது இடத்தில் இந்து முன்னணியினர் பெரிய கூடாரம் அமைத்து களிமண்ணால் செய்யப்பட்ட மூன்றரை அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை வழிபாட்டுக்காக வைத்தனர்.
இதுபற்றிய தகவல் வருவாய்த்துறை மற்றும் காவல்துறைக்குத் தெரிய வர சலங்கபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி, பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் என அங்கு விரைந்து சென்றனர். பிறகு அவர்கள் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பொது இடத்தில் சிலை வைக்கக் கூடாது என பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தடையை மீறினால் விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்வதோடு சம்பந்தபட்ட உங்களைக் கைது செய்வோம் என எச்சரித்தனர். போலீசார் கைது செய்து விடுவார்கள் என பீதியடைந்த அவர்கள் அங்கு வைத்த தங்களது சிலையை அவர்களே அகற்றிக் கொண்டார்கள். தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்ததாக இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் மேற்கு மாவட்டச் செயலாளர் முருகேசன் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவும் செய்துள்ளார்கள். இதனால், அக்கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்ற காரணத்தினால்தான் பொது இடத்தில் வழிபாடு நடத்தத் தடை செய்துள்ளது. ஆனால், இதுவே அரசியல் முதலீடாக இருக்கும் போது அந்த முதலீடு இவ்வருடம் பறிபோகிறதே என்பது தான் விநாயகர் பெயரில் அரசியல் செய்பவர்களின் கவலை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)