'Equality should be strengthened in everyone's thinking' - Chief Minister's speech

சட்டமேதை அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அம்பேத்கரின் பிறந்தநாள் வருடந்தோறும் சமத்துவ நாளாக தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கோவி.செழியன் மற்றும் நாடாளுமன்ற எம்.பி ஆ.ராசா, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவர்கள் விடுதியை தமிழக முதல்வர் திறந்து வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாகவும்; புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்தோம். இன்று காலை அம்பேத்கர் மணிமண்டபத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துவிட்டு தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம். சமத்துவத்தை நோக்கி நம்முடைய சமூகம் வேகமாக நகர வேண்டும். இந்த மண்ணில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருடைய சிந்தனையிலும் சமத்துவம் வலுப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முன்னெடுப்பை எடுத்து இருக்கிறோம். அம்பேத்கரை உயர்த்திப் பிடித்துக் கொண்டாடும் இயக்கம் தான் திராவிட இயக்கம்.

'Equality should be strengthened in everyone's thinking' - Chief Minister's speech

அவர் எழுதிய 'சாதியை ஒழிக்க வழி' என்ற நூலை 1930 ஆம் ஆண்டு தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார். அது மட்டுமல்ல அம்பேத்கர் பெயரை அவர் பிறந்த மகாராஷ்டிரம் மாநிலத்தில் இருக்கக்கூடிய மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு வைக்க போராட்டம் நடத்திய காலகட்டத்தில் இந்தியாவில் முதன் முதலில் தமிழ்நாட்டில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்று பெயர் சூட்டியவர் கலைஞர். இந்த பாதையில் தான் அம்பேத்கர் நமக்கான அடையாளம் என்று தொடர்ந்து முழங்கி கொண்டிருக்கிறோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் 174 மாணவர்கள் முதுகலை ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

கடந்த இரண்டு ஆண்டுகளில் 625 பயனாளிகளுக்கு 30 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டு மகளிரை நில உடைமையாளர்களாக நம் அரசு மாற்றி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடும் பெருமையுடனும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரசினுடைய முத்திரை திட்டமான கட்டணம் இல்லா விடியல் பயணத் திட்டத்தில் அதிகம் பயனடைய கூடியவர்கள் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த சகோதரிகள் தான். பெண்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வளர்ச்சிக்கான அடிப்படை வருமானம் ஈட்டுகின்ற நடவடிக்கையில் மேற்கொள்ளவும் தாட்கோ மூலம் வழங்கப்படும் மானியத்தை 2023 ஆம் ஆண்டு முதல் 2 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து 6 லட்சம் ரூபாயாக உயர்த்தி இருக்கிறோம்'' என்றார்.