மத்திய அரசின் அறிவுறுத்தல்படி ஏப்ரல் 1 முதல் போரிக் அமிலம், இரும்பு சத்து, வைட்டமின் பி-12 ஆகிய நுண்ணூட்டச் சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசி பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் உடல்நலத்தைக் கெடுக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடைகளில் விநியோகிக்கக் கூடாது என வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் மகளிர் ஆயம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் ஆயம் அமைப்பின் பொருளாளர் ம.கனிமொழி தலைமை தாங்கினார். அமைப்புக் குழு உறுப்பினர் மு.வித்யா, செயற்குழு உறுப்பினர்கள் க.இந்துமதி, வே.தமிழ்மொழி, முன்னாள் கிளைச் செயலாளர் ப.எழிலரசி மற்றும் மா.விருத்தாம்பாள், பி.சாந்தலெட்சுமி, ம.மகாலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஞானம்.இராசேசுவரி வரவேற்றார். தமிழ்த் தேசியப் பேரியக்க துணைத் தலைவர் க.முருகன், மகளிர் ஆயம் பொதுச்செயலாளர் மு.செந்தமிழ்ச்செல்வி, தமிழக உழவர் முன்னணி பொருளாளர் அரா.கனகசபை, நல்லூர் ஒன்றிய தலைவர் சி.பிரகாசு, பாவலர் சிலம்புச் செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், "வருகின்ற ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளதாகவும், அவ்வாறு வழங்கப்படும் அரிசியால் வயிற்றுப்போக்கு, வயிற்று அழற்சி, ஒவ்வாமை உள்ளிட்ட பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படும் எனவும், செறிவூட்டப்பட்ட அரிசியும் உணவு எண்ணெய்யும் கட்டாயமாக்கப்படும் போது அரிசி மற்றும் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் சிறு அரிசி ஆலைகள், செக்கு எண்ணெய் உற்பத்தியாளர்கள், சிறு பால் உற்பத்தியாளர்கள் ஆகியோர் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள், மக்களின் உடல்நலத்திற்கும் சிறு உற்பத்தியாளர்களுக்கும் எதிரான செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்" எனக் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழக உழவர் முன்னணி மற்றும் மகளிர் ஆயம் அமைப்புகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள், ஆண்கள், பெண்கள் எனத் திரளாகப் பங்கேற்றனர். த.பரிமளா நன்றி உரையாற்றினார். பின்னர் மணிமுத்தாறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தங்க.தனவேல் மற்றும் மகளிர் ஆயம் நிர்வாகிகள் விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை கைவிடக் கோரி மனு அளித்தனர்.