Skip to main content

நம்பவைத்து மோசம் செய்த பொறியாளர்! இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! 

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
Engineer arrested by police who cheated girl

தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்தவர் வனிதா (26, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டதாரி பெண். பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணம் செய்ய பெற்றோர் தீர்மானித்து இருந்தனர். இதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் காட்டுக்கொட்டகை பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியியல் பட்டதாரி யோகேஷ் (28) என்பவர், தரகர்கள் மூலம் விவரங்களை அறிந்து, வனிதாவை பெண் கேட்டுச் சென்றார். 

கடந்த ஜூலை மாதம் யோகேஷ் பெண் பார்க்கச் சென்றபோது, தன்னுடன் தாயார் ஜீவா (52), சின்ன சேலத்தைச் சேர்ந்த அவருடைய மாமா தமிழரசன் (39), அக்கா ஜெயஸ்ரீ (34) ஆகியோரையும் அழைத்துச் சென்றிருந்தார். இருதரப்புக்கும் பிடித்துப்போன நிலையில், செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொள்வது என முடிவு செய்தனர். பெண் பார்க்கும் படலத்தின்போதே வனிதாவுக்கும், யோகேஷூக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போனது. நிச்சயதார்த்த தேதியும் முடிவு செய்ததால், இருவரும் அப்போது முதல் சகஜமாக அலைபேசியில் பேசி வந்துள்ளனர். 

அலைபேசிவழி பேச்சு, சில நாள்களிலேயே நேரடி சந்திப்பு வரை சென்றது. பின்னர் இருவரும் வார இறுதி நாட்களில் ஒன்றாக பல இடங்களுக்கும் ஒரே வாகனத்தில் சென்று வரும் அளவுக்கு நெருங்கிப் பழகத் தொடங்கினர். இந்த நெருக்கம் அவர்களை திருமணத்திற்கு முன்பே தனிமையில் இருக்கும் அளவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. வார விடுமுறை நாட்களில் வெளியே செல்லும் இவர்கள் சொகுசு விடுதிகளில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இது மட்டுமின்றி யோகேஷ், புதிய உடைகள், மோதிரம் வாங்க வேண்டும் எனக்கூறி வனிதாவிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். 

தன்னுடனான நெருக்கத்தை திடீரென்று யோகேஷ் குறைத்துக் கொண்டதால், இதுபற்றி விசாரித்தபோதுதான் வனிதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனிதா, யோகேஷின் வீட்டிற்கே சென்று சட்டையைப் பிடித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர், வனிதாவை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். அவருடைய தாயார், மாமா, அக்கா ஆகியோர் வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்தால் தீர்த்துக்கட்டி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

யோகேஷ்தான் எதிர்காலத்தில் தனது கணவராக வரப்போகிறான் என்று எண்ணியிருந்த வனிதாவால், தான் ஏமாற்றப்பட்டதை தாங்க முடியாமல், அரூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் யோகேஷ், அவருடைய தாயார், அக்கா, மாமா ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அவர்கள் திடீரென்று தலைமறைவாகிவிட்டனர். 

இந்நிலையில் அரூர் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த யோகேஷை, காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மற்ற மூவரையும் தேடி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் யோகேஷை அரூர் சிறையில் அடைத்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்து நிலையத்தில் மது கடத்தல்; மூன்று பெண்கள் கைது

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Liquor smuggling at bus station; Three women were arrested

மதுபான பாட்டில்களை கடத்திய பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மூன்று பெண்கள் சந்தேகத்திற்கிடமாக மூன்று பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அப்போது  அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை பார்த்த அப்பெண்கள் அவசர அவசரமாக ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பிக்க முயன்றனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் மூன்று பேரையும் பிடித்து அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில் அந்த பைகளில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார் முழுமையாக சோதனை செய்ததில் 300க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும், சாராயமும் இருந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பெண்களையும் கைது செய்ததோடு, இந்த மதுபாட்டில் கடத்தல் தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகையில் மூன்று பெண்கள் பேருந்து நிலையம் வழியாக மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“போலீசை டார்லிங்னு கூப்பிட்ட போதை ஆசாமி” - நீதிமன்றம் அதிரடி

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Kolkata court takes action Calling women 'darling' is a crime

கடந்த 2015ஆம் ஆண்டு, அந்தமானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மயபந்தர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீசார் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு மதுபோதையில் நின்று கொண்டிருந்த ஜானக்ராம் என்பவர், பெண் போலீசாரை ‘டார்லிங்’ என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக, அந்த பெண் போலீஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், ஜானக்ராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன் அடிப்படையில், இந்த வழக்கு விசாரணை கடந்த ஆண்டு வந்த போது ஜானக்ராமுக்கு மூன்று மாதம் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. 

நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனை தீர்ப்பை எதிர்த்து, ஜானக்ராம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி ஜெய செங்குப்தா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘முன்பின் தெரியாத பெண்களை ‘டார்லிங்’ என அழைப்பது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் குற்றங்களுக்கு ஈடானது. பாலியல் நோக்கத்துடன் இவ்வாறு அழைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கலாம்’ எனக் கூறினார். இதனையடுத்து, குற்றவாளியின் மூன்று மாத சிறைத் தண்டனையை ஒரு மாத சிறைத் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டார்.