
நேற்று கேரளாவில் 12 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் 300 பேர் குவிக்கப்பட்டு பாதுகாப்புடன் 12 இடங்களில் சோதனையானது நடைபெற்றது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தியாகராய நகர், சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சாவூரிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் தமிழகத்தில் சென்னை உட்பட புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 34 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தியது. தொழிலதிபர் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடையவர்களின் இடங்களில் பரபரப்பாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 12.83 கோடி ரூபாய் வங்கியில் உள்ள பணம் முடக்கப்பட்டது. கணக்கில் வராத ரூபாய் 2.33 கோடி ரொக்கமாகப் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.